×

கரூர் அருகே டிஆர்ஐ அதிகாரிகள் அதிரடி பெண் விஏஓ மாமியார் வீட்டில் பல கோடி செம்மர கட்டை சிக்கியது; திருச்சி அழைத்து வந்து விசாரணை: தூத்துக்குடி தொழிலதிபரை கைது செய்ய தீவிரம்

கரூர்: கரூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக பெண் விஏஓ மாமியாரை திருச்சிக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வரும் டிஆர்ஐ அதிகாரிகள் தூத்துக்குடி தொழிலதிபரை கைது செய்ய தீவிரமாக இறங்கியுள்ளனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே சிவாயம் ஊராட்சி கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம் (70). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி லதா(60). வீட்டில் பியூட்டி பார்லர் வைத்துள்ளார். இவர்களது மகன் கிஷோர்.

தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவலர். இவரது மனைவி சந்தியா. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் விஏஓ. இந்நிலையில் கோடங்கிபட்டியில் உள்ள விஏஓ சந்தியா வீட்டுக்கு லாரியில் செம்மரக்கட்டை கடத்தி வந்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் 4 வாகனங்களில் நேற்றுமுன்தினம் அதிகாலை திருவேங்கடம் வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு வீடு மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வீட்டில் 32 செம்மரக்கட்டைகள், லாரியில் 40 செம்மரக்கட்டைகள் இருந்ததும், 5.5 டன் எடை கொண்ட இதன் மொத்த மதிப்பு பல கோடி என்பதும், விஏஓ சந்தியாவின் அண்ணனான திருச்சியை சேர்ந்த நபர், தூத்துக்குடியை சேர்ந்த முக்கிய தொழிலதிபருடன் சேர்ந்து சட்ட விரோதமாக செம்மரக்கட்டை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடந்த சோதனைக்கு பின்னர் செம்மர கட்டைகள் கடத்தலுக்கு துணையாக இருந்ததாக கூறி லதாவை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். செம்மர கட்டை கடத்தல் எவ்வளவு காலமாக நடக்கிறது, எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது, இந்த மரங்களை கடத்தி வந்து என்ன செய்கிறார்கள் என கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

லதாவின் போனில் இருந்து முக்கிய புள்ளியான தூத்துக்குடி தொழிலபதிபருக்கு அதிகாரிகள் போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதில் ஒரு கட்டத்தில் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் அவரையும், சந்தியாவின் அண்ணனையும் கைது செய்ய தீவிர முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Tags : TRI ,Karur ,Trichy ,
× RELATED விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை...