சென்னை: தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது, பேராசிரியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், 2025ம் ஆண்டு ஜூலை மாதம் பணி ஓய்வு பெற இருந்த வேல்ராஜை சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு நேரடியாக மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டின் அடிப்படையில், துணைவேந்தர் வேல்ராஜின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து 2025 செப்டம்பர் 5ம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் வேல்ராஜுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் ஆட்சி மன்ற குழு தரப்பு விளக்கத்தை கேட்காமல், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவின் உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு இல்லை என்று வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக ஆளுநர், முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
