×

‘நயன்தாரா வேணும் என்பது எனது கனவாக இருந்தால் முதல்வர் நிறைவேற்றுவாரா?’அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அநாகரிகமான பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மகளிர் அமைப்புகள் கொந்தளிப்பு

 

சென்னை: நயன்தாரா வேணும் என்பது எனது கனவாக இருந்தால் முதல்வர் நிறைவேற்றுவாரா என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அநாகரிகமான பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும், அதிமுகவில் விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.வி.சண்முகத்தின் மேடைப் பேச்சுகள் கடந்த காலங்களில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்து வருகின்றன. அவரது பேச்சுக்கு அதிமுக பெண்களே கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

ஏற்கனவே ஜெயலலிதா மறைவின்போது அவரது சைகை பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவர் குடிபோதையில் பேசியதாக அப்போதே கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் தற்போது தேர்தல் நேரம் என்பதால், தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாத வகையில் எதிர்கட்சிகளையும், முதல்வரையும் விமர்சிப்பதாக நினைத்து வாயில் வந்ததை எல்லாம் பேசி பெண்கள், நடிகைகளின் கடும் கண்டனத்துக்கு சி.வி.சண்முகம் ஆளாகி வருகிறார்.

ஒருமுறை, இருமுறை அல்ல தொடர்ந்து அவரது மேடைப் பேச்சுகள் எல்லை மீறி அரசியல் நாகரிகம் இல்லாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையில், அரசியல் மேடைகளில் பேசிய அவரது பேச்சுக்கள் ஒட்டுமொத்த கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கப்பது.

அவற்றை வகைப்படுத்தி பார்த்தால், கடந்த மாதம் ஒரு கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘‘ஓட்டு வேணும் என்பதால் அனைத்து திட்டங்களையும் தருவேன் என முதல்வர் கூறுவார். மேலும் ஆளுக்கு ஒரு பொண்டாட்டி கூட தருவேன் என்று கூட கூறுவார்’’ என அவர் பேசியது சர்ச்சையாகியது. இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல அதிமுகவினரே கண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

அவரது உளறல் பேச்சுக்கு மேலும் ஒரு உதாரணமாக, ‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் வங்கியில் உள்ள கடன்களை எல்லாம் அரசே கட்டும், எங்களால் கட்ட முடியும். ஏன் தெரியுமா, எங்கள் கூட்டணியில் பிரதமர் ஜீ உட்கார்ந்திருக்கிறார். ஜீ இருக்கிற வரை ஜீபூம்பா மாதிரி நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும்’ என்று நாட்டின் பிரதமரையே அலாவுதீனும் அற்புத விளக்கும் போல காமெடியாக்கி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம் என்றும், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றும் பேசியதும் காவல் துறையினரின் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டார். அதோடு விட்டாரா?, திமுக நடத்தும் முகாம்களுக்கு செல்லாதீர்கள். அவர்கள் உடலுறுப்புகளை திருடி சென்றுவிடுவார்கள் என்றும் தான்தோன்றித்தனமாக அவரது பேச்சுகள் அமைந்துள்ளது.

தற்போது அதற்கும் ஒருபடி மேலே சென்று நடிகை நயன்தாராவை வம்புக்கு இழுத்துள்ளார் சி.வி.சண்முகம். ஏற்கனவே, நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, நடிகை திரிஷாவை விட்டு முதலில் அவர் வெளியில் வரட்டும் என்று நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது சி.வி.சண்முகம், விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை நயன்தாராவை வம்பிழுத்து பேசியிருப்பது பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் தொடங்கி வைத்த உங்கள் கனவுகளை சொல்லுங்கள் திட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து நடிகை நயன்தாராவை அநாகரிகமாக சி.வி.சண்முகம் பேசி இருப்பது திரையுலகினர் மத்தியில் மட்டுமல்ல மகளிர் அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.வி.சண்முகம் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘‘உங்க கனவை சொல்லுங்க” என்ற திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அதில் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘‘அப்துல் கலாம் அனைவரையும் கனவு காணுங்கள் என்று கூறினார். ஆனால் முதல்வர் ஒருபடி மேல் சென்று ‘‘உங்க கனவை சொல்லுங்க” என்கிறார் ஆமா.. எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேற்றுவாரா?.. நயன்தாராவை கல்யாணம் பண்ணி வை என்று கேட்பான்.. செய்து வைப்பாரா?’’ என்று பேசினார்.

நடிகை குறித்து, சி.வி.சண்முகத்தின் இந்த கீழ்த்தரமான பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. அரசியல் ஒழுக்கம் இல்லாமல் அதிமுக மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு அநாகரிகமாக பேசியதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை என்பது அதிமுக தலைமை மீதும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஆர்ப்பாட்டத்திலேயே சி.வி.சண்முகம் இப்படி பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலபாரதி, சி.வி.சண்முகம் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

* ‘அரசியல் ஒழுக்கம் மனிதநேயமில்லை’

திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் ஒழுக்கமும் அடிப்படை மனிதநேயமும் இன்றி அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரே அநாகரிகமாக பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. பெண்களை இழிவுபடுத்தி, பெண்மையை மதிக்காத அரசியல் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது. இத்தகைய அரசியலை மக்கள் முற்றிலும் நிராகரிப்பதே காலத்தின் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

* தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சமீபத்தில் சி.வி.சண்முகம் பேசிய மிகவும் கீழ்த்தரமான பேச்சை கேட்பதற்கு காதுகள் கூசுகிறது. இதற்கு நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. தேர்தல் களத்தில் கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும்.

ஆனால் சபை நாகரிகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கி தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும். மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது. அந்த கனவு விவசாயி மகனின் கல்வியாகவோ, நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாகவோ, தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாகவோ, எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாகவோ இருக்கிறது.

ஆனால் அவரின் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும். இது பெண்களின் யுகம். அவர்கள் இல்லாத துறையே இல்லை. வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி, உங்கள் தலைவர் ஜெயலலிதாவை விடவா உதாரணம் இருக்க முடியும். அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்று கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம், அவரிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும் கிடைக்க வேண்டும். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : Nayanthara ,Chief Minister ,AIADMK ,minister ,C.V. Shanmuga ,Chennai ,Rajya Sabha ,
× RELATED ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி...