×

கூடலூர் அருகே தாய்மொழி தினம் கொண்டாட்டம்

கூடலூர் : கூடலூர் வட்டாரத்தில் உள்ள பெட்டகுறும்பர் பழங்குடியினர் குடியிருப்புகளில் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. தாய்மொழியின் முக்கியத்துவம், பாதுகாப்பு மற்றும் தலைமுறைகளுக்கு அதன் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடசனக்கொள்ளி, காஞ்சிக்கொள்ளி, முதிரக்கொள்ளி, பந்தக்கப்பு மற்றும் ஏலமன்னா ஆகிய குடியிருப்புகளில் நடத்தப்பட்டன. மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பெட்ட குறும்பர் பழங்குடியின குழந்தைகள் தங்களது தாய் மொழியில் நடத்தப்பட்ட கவிதைகள், உரைகள், பாடல்கள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் தாய்மொழியின் மீதுள்ள அன்பையும் பெருமையையும் வெளிப்படுத்தினர். இதில், கலந்துகொண்ட ஆசிரியர்கள் சமூக அடையாளம் மற்றும் பண்பாட்டு தொடர்ச்சிக்கான முக்கிய தூணாக தாய்மொழி இருப்பதை எடுத்துரைத்தனர்.

காஞ்சிக்கொள்ளி குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின கிராமத் தலைவர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தாய்மொழியை பாதுகாத்து இளைய தலைமுறைகளுக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதை வலியுறுத்தி பேசினார்.

விடுகதைகள், பழமையான சொற்கள் பகிர்வு போன்ற செயல்பாடுகள் குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தின. பெற்றோர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தைகளை ஊக்குவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்மான் சொசைட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : Mother Language Day ,Gudalur ,International Mother Language Day ,Pettakurumbar ,Kadasanakoli ,Kanchikudi ,Mudhirakoli ,Bandhakappu ,Yelamanna… ,
× RELATED கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்...