×

திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் நகரின் மைய பகுதியான சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காமராஜர் சிலை அருகே பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் குழாய் உடைந்து, கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகிறது. இந்த குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரால். அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளிக்கிறது. லாரி, மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்பட பல்வேறு வாகனங்கள் செல்லும்போது சாலையில் தேங்கி கிடக்கும் தண்ணீர் சிதறி நடந்து செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மீது பட்டு அவர்களின் ஆடைகள் அசுத்தம் அடைகின்றன.

இந்நிலையில். மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மாவட்ட வனத்துறை அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் பொதுப்பணித்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட அனைத்து துறை அலுவலகங்கள், போலீஸ் டிஎஸ்பி அலுவலகம், நகராட்சி அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு துறை நிலையம் உட்பட அனைத்து துறை அலுவலகங்களுக்கும் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்பி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உள்பட மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் அனைவரும் தினமும் இந்த வழியாகத்தான் சென்று வரவேண்டும்.

ஆனால், குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக வீணாகி ஓடும் குடிநீரை தடுக்க, இதுவரை எந்த ஒரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதனை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thiruvallur National Highway ,Thiruvallur ,Kamaraj ,Chennai-Tirupathi National Highway ,
× RELATED கே.வி.குப்பம், குடியாத்தத்தில் சமுதாய...