×

அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரம் இந்தியர்கள் ஈரானை விட்டு உடனே வெளியேற இந்திய தூதரகம் அதிரடி

 

புதுடெல்லி: ஈரானில் அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியர்கள் அந்த நாட்டை விட்டு உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரானில் ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் 10-15 நாட்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும், இல்லையெனில் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளார். இதனால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எந்த நேரத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு வெளிநாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்தியர்கள் ஈரானை விட்டு உடனே வெளியேறும்படி ஒன்றிய அரசு மக்களுக்கு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மீகப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போராட்டங்கள் அல்லது மக்கள் கூட்டமாக கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் வணிக ரீதியிலான விமானங்கள் அல்லது கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக இந்தியா திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 10 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

 

Tags : Indian embassy ,Indians ,Iran ,New Delhi ,
× RELATED ஒடிசாவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு