*தப்பியோடியவர்களுக்கு போலீஸ் வலை
வாணியம்பாடி : ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்தின்பேரில் கம்பிகொல்லை பகுதியில் ஆசனாம்பட்டு சாலையில் உள்ள சத்தியநாதன் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டு வெடிகுண்டுகள், டார்ச்லைட், வலைகள், வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த சத்தியநாதன் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
