சென்னை: தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்டத்தின் நான்காம் தொகுதி நூலினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட நார்வே நாட்டு பேராசிரியர் கிளாஸ் பீட்டர் சாலர் பெற்றுக்கொண்டார். தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை ஆய்வு செய்யும் திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேற்பார்வையில் முதன்மைப் பதிப்பாசிரியர் அரசேந்திரன் தலைமையில் ஜூலை 2022ம் ஆண்டு முதல் நான்காண்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முதன்மை பதிப்பாசிரியர் உள்பட 20 அறிஞர்கள் பணிசெய்து வருகின்றனர். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வேர்ச்சொற்களில் உருவானதென ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் Walter Skeat கண்டுபிடித்துள்ளார். இந்த 461 வேர்ச்சொற்களில் 300 வேர்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்புத்துறையுடன் 13.1.2025ல் ஒப்பந்தம் செய்துள்ளது.
25.3.2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் தொகுதி நூலினை வெளியிட்டார். இதை தொடர்ந்து இரண்டாம் தொகுதி மற்றும் மூன்றாம் தொகுதி நூல்கள் 18.1.2026 அன்று வெளியிடப்பட்டது. உலக தாய்மொழி நாளான நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்டத்தின் நான்காம் தொகுதி நூலினை வெளியிட நார்வே நாட்டு பேராசிரியர் கிளாஸ் பீட்டர் சாலர் பெற்றுக்கொண்டார்.
நேற்று வெளியிடப்பட்ட நான்காம் தொகுதி நூலில் 19 தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து இலத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் சமஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற கீழை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் உருவான வரலாறு, கருதுகோள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், உயர் கல்வித்துறை செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
