அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு, உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது வரிவிதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அதிபர் டிரம்பின் வரிக்கொள்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. இதற்கிடையில் இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்பிறகு பேசிய டிரம்ப், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும்’ என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றமே அந்நாட்டு அதிபரின் வரிக்கொள்கையை ரத்து செய்துள்ள நிலையில் அவருடன் செய்து கொண்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது இந்தியாவில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குரலாக மாறியுள்ளது. இந்தியா-அமெரிக்கா கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை பயன்படுத்தி, அமெரிக்கா செய்யும் இறக்குமதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கும் என்ற அபாயமே இதற்கு காரணம்.
இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா அதிகரிக்கும் என்று கடந்தாண்டு (2025) மே 10ம் தேதி, அச்சுறுத்தினார் டிரம்ப். இதன் காரணமாக ஆபரேஷன் சிந்தூரை தனிப்பட்ட முறையில் நிறுத்தினார் பிரதமர் மோடி. அதன்பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்திலும், டிரம்புடன் ஒன்றிய அரசு, அவருக்கு சாதகமாகவே ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த வகையில் தற்போது இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அமல் குறித்த ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், டிரம்பின் வரவேற்பும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்கின்றனர் எதிர்க்கட்சி தலைவர்கள்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமரின் ‘சரணடைதல்’ என்று விவரித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ். குறிப்பாக இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். முதற்கட்டமாக பருத்தி, சோயா பீன்ஸ், மக்காச்சோள விவசாயிகளை பாதிக்கும். மேலும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பழம் மற்றும் கொட்டை விவசாயிகளையும் ேநரடியாக பாதிக்கும். குறிப்பாக ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
அதுபோன்ற ஒரு அபாயத்தை, இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் என்பது அவரது ஐயப்பாடு. இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஒப்பந்தம் என்பது தன்னாட்சி கொண்ட இருநாடுகளுக்கு இடையேயான சமமான ஒப்பந்தமாக தெரியவில்லை. மாறாக ஏகாதிபத்திய சக்திகள், கடந்த காலங்களில் தங்களது நேரடி ஆட்சியின் கீழ் இல்லாத ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மீது வலுக்கட்டாயமாக திணித்த சமமற்ற ஒப்பந்தங்களின் பிரதிபலிப்பாகவே உள்ளது. சந்தை விதிகளுக்கு புறம்பான கட்டாய நிபந்தனைகள், இந்த ஒப்பந்தத்தின் முதல் வினோதம்.
வரிவிகிதங்களில் காணப்படும் அதீத மாறுபாடு மற்றொரு வினோதம். அமெரிக்க பொருட்கள் இந்தியாவில் நுழைவதற்கு பூஜ்யவரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்பது அபத்தமானது. இத்தகைய ஒருதலைப்பட்சமான வரிமுறையை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது பொருளாதார ரீதியாக தற்கொலைக்கு சமமானது. இந்த அபாயத்தை ஒன்றிய அரசு உணர வேண்டும் என்கின்றனர் உலகளாவிய பொருளாதார நிபுணர்கள்.
