×

திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்ட பணிகளை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்ட பணிகளை திறந்து வைத்து, 4,946 பயனாளிகளுக்கு 100.49 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநி திஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், அமுலு விஜயன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவசௌந்திரவல்லி, இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஆற்றிய உரை:
இன்றைக்கு திருப்பத்தூர் மாவட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த திருப்பத்தூர் மாவட்டத்தின் மேல் நம்முடைய முதலமைச்சருக்கு ஒரு தனி பிரியம், பாசம் உண்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சென்ற மாதம் 1 கோடியே 32 இலட்சம் மகளிருடைய வங்கி கணக்கில் 5,000 ரூபாயை வரவு வைத்துவிட்டு, நம்முடைய முதலமைச்சர் வந்து பார்த்த முதல் தொகுதி இந்த திருப்பத்தூர் மாவட்டம் தான். அப்போது மகளிர் நீங்கள் எல்லோரும் திரண்டு வந்து நம்முடைய முதலமைச்சருக்கு உங்களுடைய அன்பை தெரிவித்தீர்கள். உங்களுடைய நன்றியை நீங்கள் சொன்னீர்கள். இன்றைக்கு அதே போல என் மீதும் அன்பை வைத்து, சிரித்த முகத்தோடு மகிழ்ச்சியோடு நீங்கள் எல்லோரும் வந்திருக்கின்றீர்கள்.

இந்த நிகழ்ச்சியை முதலில் இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் தேவராஜி-க்கும், அண்ணன் நல்லதம்பி-க்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் பயனாளிகளின் சார்பாக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதலமைச்சர் சென்ற மாதம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்திருந்த போது, ஒரு தங்கையினுடைய வீட்டிற்கு சென்று அங்கு இருந்த குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்கள். அப்போது அங்கு இருந்த சகோதரி சொன்னார்கள். எனக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் மாதம், மாதம் வருகிறது. என்னுடைய மகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையும் கொடுக்கின்றீர்கள். லேப்டாப்பும் வழங்கி இருக்கின்றீர்கள் என்று மகிழ்ச்சியோடு முதலமைச்சரிடம் அந்த சகோதரி சொன்னார்கள்.

திராவிட மாடல் அரசினுடைய திட்டங்கள் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதை திருப்பத்தூரில் இருக்கக்கூடிய அந்த சகோதரியின் குடும்பமே ஒரு சிறிய உதாரணம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டினுடைய ஒவ்வொரு குடும்பமும் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களால் பயன்பெற்று இருக்கிறது. அதனால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய மகிழ்ச்சிதான் திராவிட மாடல் அரசினுடைய வெற்றிக்கு சாட்சி என்று நான் அடிக்கடி சொல்வேன். குறிப்பாக, மகளிருக்கான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் செயல்படுத்தி வருகிறார். 2021-இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததுமே, நம்முடைய முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்குதான். இன்றைக்கு அந்த திட்டத்தில் இந்த 5 வருடத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 920 கோடி பயணங்களை விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மேற்கொண்டு இருக்கின்றீர்கள். குறிப்பாக, இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 14 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றீர்கள்.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு முதலில் பள்ளிக்கு சென்றதும் தரமான காலை உணவு அதன்பிறகு தரமான கல்வி. அதுதான் முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 22 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் பிள்ளைகள் பயன்பெற்று வருகிறார்கள். அதே மாதிரி, அரசுப்பள்ளியில் படித்து, கல்லூரி சென்று படிக்க செல்கின்ற மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் என்று மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையும் நம்முடைய அரசு வழங்கி கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 12 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக நம்முடைய அரசு கொடுத்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்பையும் நம்முடைய முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை நம்முடைய அரசு வழங்கி இருக்கிறது. இவை எல்லாவற்றிக்கும் மேல் ஒரு திட்டம். உங்களுக்கு தெரிந்த ஒரு திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இன்றைக்கு ஒரு கோடியே 32 லட்சம் மகளிர் மாதம் 1,000 ரூபாய் வாங்கி கொண்டிருக்கின்றீர்கள். இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் மகளிர், உரிமைத்தொகையை பெற்று வருகிறார்கள்.

அடுத்து வருகின்ற திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி தருவேன் என்று நம்முடைய முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். நிச்சயம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னதை செய்து காட்டுவார். அதுமிட்டுமல்ல, மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என்று 38 இலட்சம் பேருக்கு சிறப்பு உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாயை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டங்களைத் தவிர, சென்ற வாரம் நம்முடைய முதலமைச்சர் பல்வேறு முற்போக்கு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். புதிய வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்கள். கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு, விவசாயம் என்று ஒவ்வொன்றிலும் நம்முடைய தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் அடுத்த கட்டத்திற்கு நாம் எடுத்துச் செல்வோம் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். 2030-க்குள் வீடற்றவர்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 8 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும், 50 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். School drop outs முற்றிலுமாக தடுக்கப்படும். அரசு பள்ளிகள் அனைத்திலும் Smart Class Facility தொடங்கப்படும் என்று வாக்குறுதிகளை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. இப்படி எல்லா வகையிலும் உங்களுக்கு இந்த அரசு துணையாக நிற்கிறது.

இந்த திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது. கந்திலி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டில் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூர் நகருக்கான புறவழிச்சாலை. திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், நெக்னாமலை கிராம மக்களுடைய போக்குவரத்து வசதிக்காக புதிய சாலை வசதிகள், வாணியம்பாடி தொகுதியில் மினி ஸ்டேடியம், திருப்பத்தூரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு அரங்கம் என்று ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது.

இதுபோன்ற திட்டங்களால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே வளர்கின்ற மாநிலங்களில் முதல் மாநிலமாக இரட்டை இலக்க வளர்ச்சியோடு 11.19 சதவீத வளர்ச்சியோடு நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. இந்த விழாவிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் நீங்கள் எல்லோரும் வந்திருக்கின்றீர்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 4 இலட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இருக்கிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தான் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர், அந்த குழுக்களுடைய வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த 5 வருடத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் கோடி அளவிற்கு குழு சகோதரிகளுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை நாம் வழங்கி இருக்கின்றோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை குழு சகோதரிகளுக்கு நம்முடைய அரசு வழங்கி இருக்கிறது. இதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர், நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கக்கூடிய கடன் தொகையாக பார்க்கவில்லை குழு சகோதரிகள் உங்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையாகதான் நம்முடைய அரசு பார்க்கிறது.

குழு சகோதரிகள் நீங்கள் அத்தனைபேரும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை சாதித்து வருகிறீர்கள். ஒவ்வொருத்தரும் Entrepreneurs ஆக மாறி வருகிறீர்கள். அதனால் தான், ஐடி கம்பெனியில் கொடுப்பது போல் உங்கள் அத்தனைபேருக்கும் உங்களுடைய புகைப்படம், பெயருடன் அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடையாள அட்டைகளில் பல்வேறு பயன்கள் இருக்கிறது. உங்களுடைய பொருட்களை 25 கிலோ வரைக்கும் 100 கிலே மீட்டர் தூரத்திற்கு அரசு பேருந்தில் எந்தவித கட்டணமின்றி நீங்கள் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம். மகளிர் குழுக்களுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல்வேறு திட்டங்களை நிச்சயம் நம்முடைய முதலமைச்சர் செய்து கொடுப்பார். அந்த உறுதியைத் தந்து, வங்கிக்கடன் இணைப்பு பெற்ற உங்க அனைவரையும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

இங்கே, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் கொடுக்க இருக்கின்றோம். இருக்க இடம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு முக்கியமான அடிப்படை தேவையாகும். அந்த தேவையை நம்முடைய அரசு தனிக்கவனம் செலுத்தி இன்றைக்கு நிறைவேற்றி வருகிறது.
பட்டா வேண்டும் என்று நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்ற காலம் மாறி, அரசாங்கமே இன்றைக்கு உங்களைத் தேடி வந்து பட்டா கொடுத்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 வருடத்தில் மட்டும் சுமார் 24 இலட்சம் பட்டாக்களை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. கடந்த 5 வருடத்தில் இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 29 ஆயிரம் பட்டாக்களை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. பட்டா பெற்ற அத்தனைப் பேருக்கும் நம்முடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது.அந்த வகையில் 6 கட்டுவற்கான ஆணையை இன்றைக்கு கொடுக்க இருக்கின்றோம். இன்றைக்கு உங்களுக்கு வீட்டை மட்டும் நம்முடைய அரசு தரவில்லை. உங்களுக்கான ஒரு முகவரியை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்த நிகழ்ச்சியில் அன்பிற்கினிய மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் வந்திருக்கின்றீர்கள். இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் மாற்றத்துக்கான திறனாளிகளாக மாறி இருக்கின்றார்கள். இன்றைக்கு உங்களுக்கு மோட்டார் பைக், செவித்திறன் கருவி உள்ளிட்ட உபகரணங்களை இந்த அரசு கொடுக்கிறது. இது எல்லாம் உங்களுக்கு கொடுக்கின்ற சலுகை கிடையாது. உங்களுடைய உரிமை. மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைக்கு என்றைக்குமே நம்முடைய அரசு குரல் கொடுக்கும். அதனால் தான் நம்முடைய முதலமைச்சர், இந்தியாவிலேயே முதன் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக பொறுப்புகளுக்கு நியமனம் செய்கின்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இவ்வளவு நாள், தங்களுக்காக மற்றவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த மாற்றுத்திறனாளிகள். இன்றைக்கு மற்றவர்களுக்காகவும் குரல் கொடுக்க போகிறார்கள். உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

மகளிர், மாணவர்கள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் இப்படி எல்லாத்தரப்பிற்கும் நம்முடைய அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உங்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் காத்திருக்கிறார்கள். ஆகவே உங்களுக்கு பக்கபலமாக இருக்கின்ற நம்முடைய முதலமைச்சருக்கு நீங்கள் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவரையும் மறுபடியும் வாழ்த்தி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Tirupattur ,
× RELATED நெல் கொள்முதல் இலக்கை உயர்த்த கோரி...