புதுடெல்லி: வேலூர் காப்பகத்தில் உள்ள சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைக்கக் கோரிய திரிபுரா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தீவிர மருத்துவ சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு தங்கியிருந்தபோது அந்த சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த சிறுமி வேலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தனது குழந்தையை மீட்டுத் தரக் கோரி அவரது தாய் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த திரிபுரா உயர்நீதிமன்றம், ‘குழந்தை என்பது ஒரு மரக்கட்டையோ அல்லது முன்னும் பின்னும் தூக்கி எறியப்படும் பந்தோ கிடையாது’ என்று காட்டமாகத் தெரிவித்தது. மேலும் குழந்தையை அவரது உயிரியல் தாயிடம் ஒப்படைக்காமல் இருப்பது சட்டவிரோத தடுப்பு காவலுக்கு சமம் எனக் கூறி, சிறுமியை உடனடியாக தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த அதிரடி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.இந்திரா, ‘சிறுமி கடந்த 3 மாதமாக இங்கு சிகிச்சையில் உள்ளார், நேரடியாக தாயிடம் ஒப்படைப்பதில் பல்வேறு நடைமுறை மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளன’ என்று வாதிட்டார். மேலும் குழந்தைகளின் நலனில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசத்தையும் ஏற்காது என்றும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திரிபுரா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அதிரடியாக இடைக்கால தடை விதித்தனர். மேலும் இது குறித்து திரிபுரா அரசு மற்றும் சிறுமியின் தாய் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், இரு மாநிலங்களுக்கும் இடையே எவ்வித சட்ட பிரச்னை ஏற்படாதவாறு உரிய குழு அமைத்து இந்த விவகாரத்தை கையாள உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
