×

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; நீதிபதிகள் கண்காணிப்புக்கு பாஜக, திரிணாமுல் வரவேற்பு: 28ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்

 

புதுடெல்லி: மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நீதிபதிகள் மூலம் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக ஆளும் திரிணாமுல் மாநில அரசிற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடும் மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையே மிகப்பெரிய ‘நம்பிக்கை குறைபாடு’ இருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு நேற்று மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது. கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள மாவட்ட நீதிபதிகளை நியமித்து வாக்காளர் பட்டியல் திருத்தப் புகார்களைக் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ‘தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான அதிகாரத்திற்கு விடப்பட்ட சவால்’ என்றும் ‘மக்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்றும் கொண்டாடியுள்ளது. அதே வேளையில், மாநில அரசின் தலையீடு இன்றி நேர்மையான முறையில் பட்டியல் தயாராக இந்த உத்தரவு உதவும் என்று பாஜகவின் மூத்த தலைவர் அமித் மால்வியா மற்றும் அமைச்சர் சுகந்த மஜும்தார் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சுமார் 95 சதவீத வாக்காளர்களைக் கொண்ட பட்டியலை வரும் 28ம் தேதிக்குள் வெளியிட அனுமதி வழங்கியுள்ள நீதிமன்றம், எஞ்சியுள்ள பிரச்னைக்குரிய பெயர்கள் குறித்து நீதித்துறை அதிகாரிகள் எடுக்கும் முடிவே இறுதியானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு சாதாரண நிர்வாகப் பணிக்காக நீதிமன்றம் தலையிடும் நிலைக்கு மேற்கு வங்கம் தள்ளப்பட்டிருப்பது மாநிலத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags : BJP ,Trinamool ,New Delhi ,Supreme Court ,West Bengal ,Trinamool government ,
× RELATED ஈரான் எண்ணெய் கடத்தல் கும்பல்...