×

“இன்றைய தற்காலிக சிரமம் – நாளைய சிறந்த எழும்பூராக மாறும்” – சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை : சென்னையில் புறநகர் ரயில் சேவையில் குளறுபடி ஏதும் இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில் சேவையில் குளறுபடி, பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிக்கையில், “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் மனமாரக் கேட்டுக்கொள்கிறது.

இந்த முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை -செங்கல்பட்டு பிரிவில் சில புறநகர் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்படுவதும் இடம்பெற்றுள்ளது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாக திட்டமிடப்பட்டவை ஆகும்; திட்டமிட்ட காலக்கெடுவில் பாதுகாப்பாகவும் திறம்படவும் பணிகளை நிறைவேற்றுவதற்காக அவை அவசியமானவை.

இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டத்தின் நோக்கம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய, பயணிகள் நட்பு நிலையமாக மாற்றுவதாகும். மேம்பட்ட வசதிகள். உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும். தினசரி இலட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்க இவை அவசியமானவை.

சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, செயல்பாட்டு தோல்வி அல்லது பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் குறித்த தவறான தகவல்கள் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

அனைத்து ரயில் இயக்கங்களும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கடுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

பயணிகள் பாதிப்பு குறித்த முழுமையான மதிப்பீட்டின் பின்னரே இந்த செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் செயல்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர்.

பயணிகள் அனைவரும் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வழிகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பும் புரிதலும் உடன், இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, அனைவருக்கும் பாதுகாப்பான, திறம்பட்ட மற்றும் வசதியான பயண அனுபவத்தை உருவாக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Southern Railway ,Chennai ,Kotham ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர்...