கோவை, திருச்சியில் தமாகாவினரிடம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்திலிருந்து த.மா.கா. சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தமாகாவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே எனது கவனம் உள்ளது. ராஜ்யசபை உறுப்பினர் குறித்து தற்போது எதுவும் நாங்கள் யோசிக்கவில்லை.
கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் முதல் பணி. ஆட்சியில் பங்கு குறித்து சிந்திக்கவில்லை’’ என்றார். ஆனால், தற்போதைய நிலையில் த.மா.கா கரைந்துபோய் கிடக்கிறது. மூப்பனார் காலத்தில் இருந்த த.மா.கா வேறு… தற்போது ஜி.கே.வாசன் காலத்தில் இருக்கிற த.மா.கா வேறு… என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அன்றைய காலக்கட்டத்தில் மூப்பனார் பெயரில் த.மா.கா.வுக்கு கோவை ஆடீஸ் வீதியில் சொந்த கட்டிடம் விலைக்கு வாங்கப்பட்டது. அதுவே நிரந்தர கட்சி அலுவலகமாக செயல்பட்டது. வாரத்தில் 7 நாட்களும் இந்த அலுவலகத்தில் த.மா.கா நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருப்பார்கள். கட்சி நிகழ்ச்சி ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும். முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், குனியமுத்தூர் ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து கட்சி பணிகளை கவனித்துக்கொண்டனர்.
ஆனால், இன்றைய நிலையில், அதே ஆடீஸ் வீதியில் உள்ள த.மா.கா அலுவலகம் வாரத்தில் 7 நாட்களும் பூட்டியே கிடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜி.கே.வாசனால் எப்படி கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற முடியும். தமாகாவின் சின்னம் சைக்கிள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதில் எப்படி கொங்கு மண்டலத்தில் இருந்து அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற முடியும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
