×

உயர்கல்வித் துறையில் ஒற்றைச்சாளர முறையில் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: உயர்கல்வித் துறையில் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் ஒற்றைச்சாளர முறையில் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் கூறினார். சட்டப் பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஒற்றைச்சாளர முறையில் முனைவர் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து பேசியதாவது: தற்போதுள்ள நடைமுறைகளின்படி, முனைவர் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதிலும், சேர்க்கை வழிமுறைகளிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே, தங்களது பல்கலைக்கழக அளவில் முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர முறையில் செயல்படுத்தி வருகின்றன.

அதேபோல, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையானது அந்தந்த பல்கலைக்கழக அளவில் இணைய வழியிலான ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தினை தேர்வு செய்யும் வகையில் பாடப்பிரிவு துறைகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் அவர்களிடம் உள்ள முனைவர் படிப்பிற்கான காலியிடங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்.

மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி புலம், நிறுவனம் மற்றும் மேற்பார்வையாளர்கள் குறித்த விருப்பங்களை தாங்களே தேர்வு செய்யலாம். இது மாணவர்களின் கல்விசார் நலன்களை பாதுகாப்பதுடன் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும். இந்த நடைமுறைகளை மாநில அளவில் கண்காணிக்க ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலம் மாணவர் சேர்க்கையில் இருந்து, பாடநெறி முடித்தல் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள் ஒதுக்கீடு மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் வரை அனைத்து நிலைகளையும் கண்காணிக்க இயலும். மேலும், மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கவும், சேர்க்கை மற்றும் ஆராய்ச்சி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் இதில் வழிவகை செய்யப்படும்.இவ்வாறு பேரவையில் அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.

Tags : Minister ,Kovi ,Berawada ,Sezhiyan ,Chennai ,Minister of Higher Education ,Council ,SEZHIAN ,
× RELATED சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த பாமக குழு அமைப்பு: ராமதாஸ்