×

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 31 வயது பெண்ணுக்கு பெருநாடி வேர் சிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல்

சென்னை: காவேரி மருத்துவமனை கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகவும் சிக்கலான ‘பெருநாடி வேர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. 31 வயது பெண் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் இதயச் செயலிழப்பு அறிகுறிகளுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த பெண்ணைப் பரிசோதித்ததில், அவரது இதய வால்வில் கசிவு இருப்பதும், இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் பெரிதாக வீங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதயத்தின் ரத்தம் செலுத்தும் திறன் மிகவும் பலவீனமாக இருந்ததாலும், இது உயிருக்கு ஆபத்தான நிலை என்பதாலும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பெருந்தமனியில் சேதமடைந்த பகுதியோடு இதய வால்வையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உலோக வால்வைப் பொருத்துவதே வழக்கமான சிகிச்சை முறையாகும். இது பலன் தரும் என்றாலும், வாழ்நாள் முழுவதும் ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரைகளை நோயாளி எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தை மெலிய வைக்கும் இந்த மாத்திரைகள், இளம் பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறப்பின்போதும் தாய், சேய் இருவருக்கும் பெரும் ஆபத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும்.

இதனை கருத்தில் கொண்டு மிகவும் நவீனமான ‘ஆர்டிக் வால்வு ஸ்பேரிங் ரூட் ரிப்ளேஸ்மென்ட்’ என்ற சவாலான அறுவை சிகிச்சை முறையைத் மேற்கொள்ள டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் தலைமையிலான மருத்துவ குழு தேர்வு செய்தனர். சிறப்பு நிபுணத்துவம் தேவைப்படும் இந்த அறுவை சிகிச்சையில், நோயாளியின் சொந்த இதய வால்வை அகற்றாமல், பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதனால், வாழ்நாள் முழுவதும் ரத்தத்தை மெலிதாக்கும் மாத்திரைகளை உட்கொள்ளும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அவர் பாதுகாப்பாகக் கருத்தரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஐந்து மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் ஐந்து மருத்துவர்கள், செவிலியர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். நோயாளியின் இதயம் மிகவும் பலவீனமாக இருந்த நிலையிலும், இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, விரைவாகக் குணமடைந்த நோயாளி சீரான உடல்நிலையுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

Tags : Kauvery Hospital ,Chennai ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...