- உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
- புது தில்லி
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்...
புதுடெல்லி: தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு தலைவர் உட்பட பத்து பேரையும் நியமனம் செய்து கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் சௌகத் அலி முகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான பி.வில்சன்,’ ஏற்கனவே தமிழ்நாடு வக்பு வாரியத்தில் உரிய சட்ட விதிகளின்படி எட்டு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று பேர் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டால் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட தடை விதிக்க முடியாது.
மேலும் விரைவில் தமிழ்நாட்டில் சட்டபேரவை தேர்தல் வரவுள்ளது. இதுபோன்ற சூழலில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த்,’இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 9ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். மேலும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டிய மேலும் மூன்று உறுப்பினர்கள் யார்? என்பது குறித்த பரிந்துரையை அடுத்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
