*பொதுமக்கள் கோரிக்கை
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவும், எரிக்கவும் 10க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளன. இங்கு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது.
மேலும் இறந்தவர்களின் உடலை எரிப்பதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாலும், ஏரி கொட்டகைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எரிக்க பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல் நெல்லிக்குப்பம் சோழவல்லி சுடுகாட்டில் 7 வார்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை எரிக்க போதுமான இடவசதி இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சியால் புதிதாக எரிவாயு தகனமேடை அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தமிழக அரசு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2 கோடி 15 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடந்தது.
இதில் உடலை ஏறியூட்டும் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, குளியலறை வசதி, கழிவறை வசதி, மும்முனை மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு தகன மேடை கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா எப்போது நடக்கும் என எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல் எரிவாயு தகனமேடை வளாகத்தில் பூங்கா அமைக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி எரிவாயு தகன மேடையை உடனடியாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நெல்லிக்குப்பம் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

