×

ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அறிவியல் பூங்கா பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது

ஊட்டி : ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்றும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், பணிகள் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை விரைவில் திறக்க வாய்ப்புள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் மரவியல் பூங்கா மட்டுமின்றி, ஊட்டியில் நகராட்சி சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய பூங்காக்கள் உள்ளன. இவைகள் அனைத்துமே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இதனை முறையாக பராமரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இடையில் சில ஆண்டுகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பெரும்பாலான பூங்காக்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், புதர்கள் மண்டி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் மாறியது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சுமார் ரூ.1 கோடி செலவில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்காவை சீரமைத்தது. ஆனால் பஸ் நிலையம் அருகே உள்ள சிறிய பூங்கா திறக்கப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்தது.

இதனால் இது இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்நிலையில், இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்கும் வகையிலும், குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிடும் வகையிலும் அதே சமயம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காகவும் இதனை அறிவியல் பூங்காவாக மாற்றத் திட்டமிட்டது.

ரூ.2 கோடியே 17 லட்சம் செலவில் இந்த பூங்கா சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பூங்கா முழுவதிலும் இருந்த முட்புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அங்கு பல்வேறு அறிவியல் சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.இந்த பூங்காவில் தற்போது ராக்கெட், கார் இயங்கும் விதம், டயனோசர் விலங்குகளின் மாதிரிகள் உட்பட பல்வேறு வகையான அறிவியல் சார்ந்த உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இது குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அதன் அருகே விளக்க குறிப்புகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து 90 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளது. விரைவில் அறிவியல் பூங்கா திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : FOOTY CENTRAL BUS STATION ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற...