- மகாராஷ்டிரா
- பாஜக அரசு
- காங்கிரஸ்
- மும்பை
- பாஜக-தேசியவாத காங்கிரஸ்
- சிவசேனா
- முதல் அமைச்சர்
- தேவேந்திர ஃபட்னாவிஸ்
மும்பை: மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை பாஜ அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜ- தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா அடங்கிய, ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2014ல் முதல்வர் பிரித்விராஜ் சவான் தலைமையிலான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மராத்தாக்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஆட்சிக்கு வந்த பாஜ- சிவசேனா கூட்டணி அரசு, இதை சட்டமாக்கவில்லை. மேலும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை இந்த அவசர சட்டம் மீறுவதாக கூறி, மும்பை உயர் நீதிமன்றமும் இந்த அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டம் காலாவதியாகி விட்டதாக மகாராஷ்டிரா அரசு நேற்று தெரிவித்தது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு மற்றும் பகுதிநேர அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு அவசர சட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஜாதி மற்றும் கிரீமிலேயர் அல்லாத சான்றிதழ்களை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
