கோவை: ரூ.25 கோடி கடன் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்த ஹரி நாடார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (57). இவர் அதே பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டுமான தொழிலை செய்து வருகிறார். அவருக்கு தனது நிறுவனத்தின் தொழில் அபிவிருத்திக்காக பணம் தேவைப்பட்டுள்ளது.
அப்போது சத்திரிய சான்றோர் படை தலைவர் நெல்லையை சேர்ந்த ஹரி நாடாரிடம், தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் ஏற்பாடு செய்து தரும்படி கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டுள்ளார். இதையடுத்து ஹரி நாடார் சேலம் எடப்பாடியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை சிவசாமிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரிடம், சிவசாமி ரூ. 25 கோடி கடன் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு செந்தில்வாசன் கடன் ஏற்பாடு செய்து தந்தால் 2 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்றும், பைனான்ஸ் அதிகாரிகள், நிறுவனத்தை வந்து பார்வையிட உண்டாகும் செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முன்பணம் ரூ. 40 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து சிவசாமி 2 சதவீதம் கமிஷன் தொகையும், ஆய்வு செலவையும் தருவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிவசாமியின் நிறுவனத்தை வந்து சிலர் ஆய்வு செய்துள்ளனர். அதற்கு சிவசாமி ரூ.70 ஆயிரத்தை செந்தில்வாசனிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் கடன் தொகையை ஏற்பாடு செய்து தரவில்லை. இதனால், சிவசாமி ரூ.70 ஆயிரத்தை திருப்பி தரும்படி செந்தில்வாசனிடம் கேட்டுள்ளார்.
அப்போது செந்தில்வாசன் சென்னையில் தனக்கு தெரிந்த நிதி நிறுவனம் மூலம் பணம் ஏற்பாடு செய்து தருவதாக அன்பு செழியன், கார்த்திகேயன், ஆண்டனி ஆகியோரை சிவசாமிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்கள், சிவசாமியிடம் ரூ.25 கோடி கடனுக்கு ஆவணங்கள் மற்றும் செக்யூரிட்டி அக்ரிமெண்டில் கையெழுத்திட்டு பதிவு செய்ய ரூ.67 லட்சம் முன்பணம் வேண்டும் என்றனர். மேலும், ரூ.12.50 கோடிக்கு தனித்தனியாக 2 காசோலைகளை காண்பித்துள்ளனர். இதை நம்பி சிவசாமி ரூ.67 லட்சத்தை வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் அவர்கள் கடன் பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. பலமுறை செந்தில்வாசனிடம் கேட்டும் சரியான பதில் அளிக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். அப்போது தான் சிவசாமிக்கு 5 பேரும் சேர்ந்து மோசடி செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவசாமி பீளமேடு போலீசில் அக்டோபர் மாதம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செந்தில்வாசன், ஹரி நாடார், அன்பு செழியன், கார்த்திகேயன், அந்தோணி ஆகியோர் சேர்ந்து சிவசாமியிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பீளமேடு போலீசார், சேலம் எடப்பாடியை சேர்ந்த செந்தில்வாசன் (51), சென்னை சிறையில் இருந்த நெல்லையை சேர்ந்த ஹரி நாடார் (41) மற்றும் சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (எ) கதிரேசன் (45) ஆகியோரை 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மூவரையும் பீளமேடு போலீசார் ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஹரி நாடார் மற்றும் கதிரேசன் ஆகிய 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 2 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். செந்தில்நாதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, செந்தில்நாதன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள தேவகோட்டையை சேர்ந்த அன்பு செழியன், தென்காசியை சேர்ந்த ஆண்டனி ஆகியோரை தேடி வருகின்றனர்.
