×

வெங்காய வியாபாரி வீட்டில் 23 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, பணம் கொள்ளை

சங்கராபுரம், பிப். 19: சங்கராபுரம் அருகே வெங்காய வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயூப் கான். வெங்காய வியாபாரி. இவரது மனைவி நூர்ஜகான் என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாகன விபத்து ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீடு பூட்டியே இருந்துள்ளதாக தெரிகிறது. மீண்டும் 10 நாள் கழித்து நேற்று முன்தினம் ஆயூப்கான் குடும்பத்தினர் வீட்டை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களையும் மர்மநபர்கள் உடைத்து அதிலிருந்த 23 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1,45,000 ரொக்கம் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் ஆயுப்கான் அளித்த புகாரையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து வரும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Sankarapuram ,Sankarapuram, Kallakurichi district… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...