- பல்கலைக்கழக
- ஆரோவில்
- Vanur
- பாரதி மோகன்
- டாக்டர் சிட்டி
- மொரட்டாண்டி டோல்கேட்
- வானூர் தாலுக்கா
- புதுச்சேரி பல்கலைக்கழகம்
- அபர்ணா
வானூர், பிப். 19: வானூர் தாலுகா மொரட்டாண்டி டோல்கேட் அருகில் உள்ள டாக்டர் சிட்டியில் வசிப்பவர் பாரதிமோகன், (50) இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி அபர்ணா, மகள் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மேல்மாடியில் துாங்க சென்றுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தரைதளத்தில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. மேலும், வீட்டில் உள்ள அனைத்து அறைகளின் கதவுகளும் திறந்தே இருந்துள்ளது. இது குறித்து பாரதிமோகன் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய், பைபாஸ் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று நின்றது. விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து பாரதிமோகன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகைகளை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி., கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
