சென்னை: தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் சோதனையின் போது கண்டறியப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்:
தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த கூடாது. தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராபிட்டோ மற்றும் போர்ட்டர் செயலி மூலமாக ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனங்கள் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் பிறகு காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் திடீர் வாகன சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, சம்பந்தபட்ட செயலிகள் மூலம் இயக்கப்படும் இந்த வாகனங்களை ஆய்வு செய்து சரக்குகளை ஏற்றி செல்லும் இருசக்கர வாகனங்களை சிறைபிடிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்படும் வாகனங்கள் எந்த செயலி மூலம் இயக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தினமும் உடனடியாக போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்கள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த சூழலில் தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது.
