×

டெல்லியில் ஏஐ தாக்க உச்சி மாநாடு தொடங்கியது ஏஐ வளர்ச்சியில் இந்தியா முன்னிலை: உலக தலைவர்களை வரவேற்று பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு நேற்று தொடங்கி வரும் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடக்க உள்ளது. கடந்த 2023ல் முதல் ஏஐ உச்சி மாநாடு இங்கிலாந்திலும், 2025ல் 2வது மாநாடு பிரான்சிலும் நடந்தது. இதைத் தொடர்ந்து உலகின் தெற்கு பகுதியில் முதல் முறையாக ஏஐ மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாட்டுடன் ஏஐ தாக்க கண்காட்சியும் நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியில் கூகுள், என்விடியா, அமேசான், மெட்டா, ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏஐயின் புதுமைகளை காட்சிப் படுத்தி உள்ளன.

இந்த கண்காட்சியில் 13 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடான ஏஐ தாக்க மாநாட்டில் ஆல்பாபெட்டின் சுந்தர் பிச்சை முதல் ஓபன்ஏஐ-யின் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆந்த்ரோபிக்கின் டாரியோ அமோடி வரையிலான ஜாம்பவான்கள் பலர் உரையாற்ற உள்ளனர். 5 நாள் மாநாட்டில் மொத்தம் 3,250க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் 500க்கும் மேற்பட்ட அமர்வுகளில் பங்கேற்று ஏஐயின் மாற்றம் குறித்து பேசுகின்றனர்.

உச்சிமாநாட்டின் கடைசி 2 நாட்கள் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஏஐயின் எதிர்காலம் குறித்து பேச உள்ளனர். இந்த மாநாட்டை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உலக தலைவர்களை வரவேற்றார். மேலும் பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் அவர் பேசினார்.

இந்த கண்காட்சி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: ஏஐ பற்றி விவாதிக்க உலகை ஒன்றிணைக்கிறோம். இன்று முதல், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த உச்சி மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்பதாகும்.

மனிதனை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு இன்று சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம் மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட பல துறைகளை மாற்றி வருகிறது. செயற்கை நுண்ணறிவின் பல்வேறு அம்சங்களான புதுமை, ஒத்துழைப்பு, பொறுப்பான பயன்பாடு மற்றும் பலவற்றைப் பற்றிய உலகளாவிய உரையாடலை இந்த மாநாடு வளப்படுத்தும்.

இந்த உச்சிமாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, புதுமையான மற்றும் வாய்ப்பு சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு நன்றி. நமது நாடு செயற்கை நுண்ணறிவு மாற்றத்தில் முன்னணியில் உள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிலிருந்து துடிப்பான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி வரை, செயற்கை நுண்ணறிவில் நமது முன்னேற்றங்கள் லட்சியம் மற்றும் பொறுப்பு இரண்டையும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

* பிரான்ஸ் அதிபருடன் இன்று பேச்சுவார்த்தை
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 3 நாள் பயணமாக நேற்று மும்பை வந்தார். மேக்ரானின் 4வது இந்திய பயணம் இது. முதல் முறையாக அவர் மும்பை வருகிறார். இன்று டெல்லியில் அவரை வரவேற்கும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 3.15 மணிக்கு மும்பையின் லோக் பவனில் அதிபர் மேக்ரானை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியா-பிரான்ஸ் உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும், ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவது மற்றும் புதிய, வளர்ந்து வரும் துறைகளில் மேலும் பன்முகப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். மாலை 5:15 மணிக்கு, இரு தலைவர்களும் இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டை தொடங்கி வைத்து உரையாற்றுவார்கள்.

Tags : AI attack summit ,Delhi India ,PM Modi ,New Delhi ,Artificial Intelligence Impact Conference ,Delhi Bharat Hall ,AI Summit ,UK ,France ,
× RELATED அரசியலில் ஓய்வு என்பதே இல்லை;...