மதுரை: மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை போலீசார் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீசார்ர் ஜாமீன் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில், வழக்கறிஞர் முகைதீன் பாஷா ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அஜித்குமார் நகை திருடியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. காணாமல் போன நகையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் டிஎஸ்பி தவிர்த்து வேறு உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை. ஆனால், காவல்துறையினர் தான் அஜித்குமாரை அடித்து கொலை செய்தனர் என்பதற்கு, போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என கூறப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘‘காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். உயரதிகாரி கூறி விட்டால், அடித்துக்கொலை செய்வதா? அடிக்க முடியாது என்று ஒருவராவது ஏன் சொல்ல மறுத்தனர்? சட்டவிரோதமாக செயல்பட முடியாது என உயரதிகாரிகளிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும்’’ என தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கில் போலீசார் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. எனவே மீதமுள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும். இதில் டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, அவர் பாதுகாக்கப்பட்டு வருகிறார் என தெரிகிறது. விசாரணை முடியும் வரை, கைதாகியுள்ள எவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. இந்த வழக்கினை விசாரணை நீதிமன்றம், 6 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தார்.
