திட்டக்குடி: சுற்றுலா சென்று திரும்பியபோது லாரி மீது கார் மோதி சென்னையை சேர்ந்த 3 வக்கீல்கள் பரிதாபமாக பலியாகினர். சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பிரசாந்த்(30), நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐவின் ஐர்லாந்த் மகன் ஐசக்(32), அருகம்பாக்கத்தை சேர்ந்த சுகுமார் மகன் கர்ணன் என்ற கருணாகரன்(33), திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கிரி(25) ஆகியோர் வக்கீல் படிப்பை முடித்து, சென்னையில் வழக்கறிஞர்களின் ஜூனியர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி சுற்றுலா தலத்திற்கு சென்றுவிட்டு, நேற்றுமுன்தினம் இரவு காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று காலை 8 மணியளவில் கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த எழுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, முன்னால் ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இடுபாடுகளுக்குள் சிக்கி பிரசாந்த், ஐசக் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருணாகரன், கிரி ஆகியோர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே கருணாகரன் உயிரிழந்தார். கிரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* 2 கார் நேருக்குநேர் மோதல் தந்தை, தாய், மகன் சாவு
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). இவரது மகன் சோலை செல்வம் (30). ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் சோலையப்பன், மனைவி விஜயலட்சுமி (60), மகன் சோலை செல்வத்துடன் காரில், சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், தும்முசினம்பட்டி கிராமத்திற்கு சென்று குலதெய்வ வழிபாட்டை முடித்து விட்டு நேற்று காலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை மகன் சோலை செல்வம் ஓட்டினார். பரளச்சி – கமுதி விலக்கு பகுதியில் அய்யனார்குளம் அருகே எதிரே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க காரை செல்வம் திருப்பினார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சோலையப்பன், மகன் சோலை செல்வம், மனைவி விஜயலட்சுமி ஆகிய மூவரும் உயிரிழந்தார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
