×

வங்கதேச புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்: ஜனாதிபதி மாளிகைக்கு பதில் நாடாளுமன்ற வளாகத்தில் விழா

டாக்கா: வங்கதேசத்தில் பிப்.12 அன்று நடந்த 13வது பொதுத்தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ஆட்சி அதிகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அந்த அடிப்படையில் வங்கதேச புதிய பிரதமராக கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று பதவி ஏற்கிறார். வங்கதேசத்தின் நீண்டகால பாரம்பரியத்தை மீறி, ஜனாதிபதி மாளிகையான பங்கபபனுக்குப் பதிலாக, நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசாவில் புதிய பிரதமர் பதவி ஏற்பு விழா நடை பெற உள்ளது.

இந்த அறிவிப்பை நாடாளுமன்ற செயலாளர் கனிஸ் மவுலா அறிவித்துள்ளார். அதன்படி புதிய எம்பிக்கள் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற தெற்குபிளாசாவில் பதவி ஏற்பார்கள். அதை தொடர்ந்து பிஎன்பி கட்சியின் புதிய எம்பிக்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். அந்த கூட்டத்தில் வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் தேர்வு செய்யப்படுவார். பின்னர் இன்று மாலை 4 மணிக்கு புதிய பிரதமர் பதவி ஏற்பு விழா நடைபெறும். வழக்கமாக புதிய பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். அந்த பாரம்பரியத்தை தாரிக் ரஹ்மான் மாற்றி அமைத்து உள்ளார்.

அவரது பதவி ஏற்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தெற்குபிளாசாவில் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு வங்கதேச ஜனாதிபதி முகமது ஷாஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மக்களவையின் செயலாளர் உத்பல் குமார் சிங் கலந்து கொள்கிறார்கள்.

Tags : Tariq Rahman ,Bangladesh ,President's House ,Dhaka ,Former ,Kalita Jia ,PNP ,13th general election ,Mohammad Yunus ,
× RELATED ஈரான் குண்டு வீச்சில் கப்பல்...