×

தமிழ்நாட்டில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது: மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் பிரமாண்டமான வளர்ச்சி; மாநில திட்டக்குழு துணை தலைவர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-26ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-26, கடந்த ஐந்து ஆண்டிற்கான மாநிலத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை எடுத்துரைக்கிறது.

இவ்வறிக்கை 10 அத்தியாயங்களில் பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு செயல்பட்டது என்பதை விரிவாக விளக்குகிறது. இவ்வறிக்கையானது, மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகளை விளக்குவதுடன், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையான தனிநபர் வருமானம் ஆகிய இரு இலக்குகளையும் அடைய கவனிக்க வேண்டிய பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை, கொள்கை வகுப்பாளர்கள், வணிகம், தொழில்வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. பொருளாதார போக்குகளை ஆவணப்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால மேம்பாட்டு உத்திகளை வடிவமைப்பதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான கருவியாக செயல்படும்.

இந்நிலையில் சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள மாநில திட்டக் குழு அலுவலக கூட்ட அரங்கில் துணை தலைவர் ஜெயரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் பிற மாநிலங்களில் உணவு பொருட்களின் விலைவாசி ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவாக உள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்ததன் காரணமாக முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. இளைஞர்கள் பெருமளவில் உயர்கல்வி படிப்பதால், சந்தையில் சாதாரண வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் வட மாநில இளைஞர்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வேளாண்துறையை சார்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் 25 விழுக்காடு தான் உள்ளனர். அதே வேளையில் தமிழகத்தில் உணவு உற்பத்தி கொள்முதல் செய்து வைக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வேளாண் துறை புனிதப்படுத்தி அங்கேயே இருந்தால் எப்படி அவர்களது பொருளாதாரம் நன்றாக இருக்கும், வேளாண் தொழிலுக்கு பாதிப்பில்லை அதை நம்பியிருப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகம் தொழில்துறையில் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் துறை, கப்பல் கட்டும் துறை, தோல் அல்லாத காலணி தயாரிக்கும் துறைகள் அதிக வேலை வாய்ப்பு உருவாகிறது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக வேளாண் துறையில் பல இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புறங்களில் பணிகளுக்கு வரும் பெண்களின் பங்கை அதிகரிக்க வேண்டும் அதற்குண்டான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் அதிக கல்வி நிறுவனங்கள் இருக்கிறது. இங்கு பலர் படித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அவரை கொண்டு சென்று பணி வழங்குவதை விட இங்கேயே நிறுவனங்களை தொடங்க திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு தான் மிகப்பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பேக்கேஜ்களை முறைப்படுத்தி தங்கும் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு அது நோக்கி வரும் அதை தடுக்க அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட இரட்டை இலக்கில் வளர்ந்துள்ளது. உலகமெல்லாம் 3 விழுக்காடுகள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்தியா 7 விழுக்காடுகளும், தமிழ்நாடு 11.3 விழுக்காடுகள் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மின்னணு சாதனங்கள் உற்பத்தியை போலவே காலணி துறையிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகளில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் தொழில் துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். உலகமெல்லாம் 3 விழுக்காடுகள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்தியா 7 விழுக்காடுகளும், தமிழ்நாடு 11.3 விழுக்காடுகள் வளர்ச்சி அடைந்துள்ளது.

Tags : Tamil Nadu ,State Planning Commission ,Chennai ,Vice Chairman ,Jayaranjan ,Chennai Secretariat ,
× RELATED உழவன் கணக்கு பார்த்தால் ஒரு படி நெல்...