தவாங்: நாட்டின் எல்லை பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என ராகுல் காந்திக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த எல்லை மோதல் தொடர்பாக ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும் ஒரு புத்தகத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, கடந்த 2ம் மற்றும் 11ம் தேதிகளில் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பல்வேறு புகார்களை முன்வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பேசியதற்காக ராகுல் காந்தி மீது உரிமை மீறல் அறிவிப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், கடந்த 1962ம் ஆண்டு நடந்த போரின் போது நிலப்பரப்பை இழந்ததற்காக காங்கிரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தற்போதைய அரசு எல்லை உள்கட்டமைப்பை மிக வலிமையாக மாற்றியுள்ளது என்றும் ஆளுங்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ‘எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேசிய பாதுகாப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. வெறும் விளம்பரத்திற்காகப் பேசுவதை நிறுத்திவிட்டு ராகுல் காந்தி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும்.
அவரது தேவையற்ற பேச்சுகள் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பு குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவதைத் ராகுல் காந்தி தவிர்க்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
