கடலூர் மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் அரசியல் பங்களிப்பில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற 1952ஆம் ஆண்டு முதலாவது சட்டமன்ற பொதுத் தேர்தல் முதல் 2021 வரை பல்வேறு கட்சிகளின் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிறுவனத் தலைவர்களை முதன்முறையாக சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளது. 1950ஆம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் துவக்கினார். அதன்பின்பு நடைபெற்ற 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அக்கட்சியைச் சார்ந்தவர்கள் போட்டியிட்டு 19 பேர் வெற்றி பெற்றனர். இதில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி வெற்றிபெற்று சட்டசபைக்கு தேர்வானார்.
1989ஆம் ஆண்டு பாமகவை ராமதாஸ் நிறுவினார். இருப்பினும் அவர் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என தெரிவித்து, அதன்படி தற்போதுவரை தேர்தலில் போட்டியிடாமல் உள்ளார். பாமக முதன்முதலில் 1991ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. யானை சின்னத்தில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் முறையாக பாமக சார்பில் சட்டமன்றத்திற்கு சென்றார்.
1982ல் மலைச்சாமி என்பவரால் தொடங்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன், பின்னர் அக்கட்சியின் பெயரை விடுதலை சிறுத்தைகள் என மாற்றம் செய்தார். தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து, கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார். தற்போது, மங்களூர் சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டு திட்டக்குடி தனி தொகுதியாக மாறியுள்ளது.
2005ம் ஆண்டு தேமுதிகவை விஜயகாந்த் துவங்கினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் மட்டுமே வெற்றிவாகை சூடியது. முரசு சின்னத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் அக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் கால்பதித்தார். இதேபோல் பாமகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக விளங்கிய பண்ருட்டி வேல்முருகன் கடந்த 2012ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி தவாக என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதை அடுத்து 2016 நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அவர், 2021ம் ஆண்டு திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இதேபோல் 2006ல் மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்வப்பெருந்தகை, பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அக்கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். 1991, 1996ம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவராக ஏற்கனவே பொறுப்பு வகித்துள்ளார். 2011ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்எல்ஏவான கே.பாலகிருஷ்ணன் பின்னாளில் அக்கட்சியின் மாநில செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். இவ்வாறாக கடலூர் மாவட்டம் பல்வேறு கட்சிகளின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி புதிய அத்தியாயத்தை எழுதிய பெருமையை தக்கவைத்துள்ளது. அதேபோன்று, இந்த மாவட்டத்திலிருந்து சட்டசபைக்கு தேர்வானவர்கள் பின்னாளில் கட்சியிலும் பெரிய பெரிய பதவிகளை வகித்துள்ளனர். குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்
தக்கது.
* நெய்வேலி பெற்றெடுத்த 3 எம்எல்ஏக்கள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நெய்வேலியில் திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதேபோன்று திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தவாக நிறுவன தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் களமிறங்கி வென்றார். விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். இவர்கள் தேர்வு செய்யப்பட்டது என்னவோ நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளாக இருந்தாலும் 3 பேருமே நெய்வேலியை பூர்வீகமாக கொண்டவர்கள். வேல்முருகனின் சொந்த ஊர் புலியூர் கிராமம். சபா.ராஜேந்திரனின் சொந்த கிராமம் சொரத்தூர். ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் முத்தாண்டிக்குப்பம். இந்த 3 ஊர்களுமே நெய்வேலி தொகுதியில் வருகிறது. இவர்கள் 3 பேருமே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வானவர்கள். இதனால் நெய்வேலி 3 எம்எல்ஏக்களை பெற்ற தொகுதியாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.
