சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னையில் சமீபத்தில் நடந்த தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜ தலைவர் ஹெச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலன் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை, 6 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் கவனித்து வருவதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்.ராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து ஹெச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்,ராஜாவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். நான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர். இருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
