குடியாத்தம், பிப்.14: குடியாத்தத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் பெங்களூருவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அந்த பெண் குழந்தைக்கு தற்போது 14 வயது. அந்தச் சிறுமி குடியாத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி கடந்த சில தினங்கள் முன்பு திருவண்ணாமலைக்கு சென்றபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்தனர். அதில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.
