கே.வி.குப்பம், பிப்.14: கே.வி.குப்பம் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலத்தை சேர்ந்தவர் ராகவன்(30), செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி சுவேதா(28), நர்ஸ். காதல் திருமணம் செய்தவர்கள். கடந்த 8ம்தேதி நள்ளிரவு பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் ராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது, ராகவனின் மாமனார் அமுல்ராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் ராகவனின் மனைவி சுவேதா, மாமனார் அமுல்ராஜ்(46) ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது அமுல்ராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குடும்ப நண்பரான பைனான்ஸ் தொழில் செய்து வரும் வெட்டுவாணத்தை சேர்ந்த கார்த்திக்(29) என்பவர் உதவியுடன், ராகவனை திட்டமிட்டு கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அமுல்ராஜ், கார்த்திக் ஆகியோரை போலீசார் கடந்த 11ம் தேதி இரவு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த கூலிப்படையை வரவழைத்து, ராகவனை கொலை செய்ததாக தெரிவித்தார். அதன்பேரில் பெங்களூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற போலீசார். கூலிப்படையை சேர்ந்த 3 பேரை நேற்று காலை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ்பாபு மகன் ஏசைய்யா என்கிற சவீன்குமார்(29), பெங்களூர் பகுதியை சேர்ந்த பாபு மகன் சுஜன்(19), ஜெயபால் மகன் ராமு (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
