திருச்சி: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.30 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை இன்று காலை விடுவித்துள்ளது தமிழக அரசு. இது பெண்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000ல் இருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இது பயனாளிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் அவர்கள் முதல்வருக்கு மகிழ்ச்சியுடன், நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் கூடலூர் சு.கீர்த்தனா(37): திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.5,000 என்னை போன்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவோம். கடந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட ரூ.3000 முதல்வர் வழங்கினார். பொங்கலை சிறப்பாக கொண்டாடினோம். அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த இன்ப அதிர்ச்சியாக இன்று அதிகாலையே மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கியது எங்களை திக்குமுக்காடவைத்துள்ளது. விடியல் பயணம், உரிமை தொகை, மாணவிகள் உயர்கல்வி படிக்க மாதாந்திர உதவிதொகை என இந்த ஆட்சி முழுக்க முழுக்க பெண்கள் நலனில் அக்கறையுடன், பெண்களுக்காகவே செயல்படுகிறது. மகளுக்கு ஒரு அப்பா என்ன செய்வாரோ அந்த ஸ்தானத்தில் முதல்வர் பெண்களுக்கு பயனுள்ள திட்டங்களை செய்து வருகிறார். இனியும் செய்வார். 2026ல் மீண்டும் அவர் வெற்றி பெற்று முதல்வராக வர வேண்டும். அவர் மீண்டும் ஆட்சி செய்தால் தான் தமிழகம் மலரும்.
தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஆரோக்கிய அகிலா(45): 2023ம் ஆண்டிலிருந்து எனக்கு மட்டுமல்ல, அனைத்து மகளிருக்கும் மாதம் தவறாமல் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை டிவி பார்த்தபோது மகளிர் தொகை ரூ.5000 அதிகாலையே வைப்பு வைத்ததாக முதல்வர் கூறியது பேரின்பத்தை கொடுத்துள்ளது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. முதல்வர் தூங்கி எழுந்ததுமே மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளார். இந்த தொகை பயனுள்ளதாக இருக்கும். இதை வைத்து நான் எல்ஐசி பாலிசி, டியூசன் பீஸ் கட்டுவேன். கஷ்டம் பாதியாக குறைந்தது. உதவி தொகையை உயர்த்துவதை வரவேற்கிறோம்.
பெரம்பலூர் வடக்குமாதேவி புவனேஸ்வரி: பெண்களின் கஷ்டத்தை தீர்க்கும் முதல்வர் கிடைத்துள்ளார். எங்கள் பார்வைக்கு அவர் ஒரு தந்தையாகவும், சகோதரராகவும் தெரிகிறார். அரசிடமிருந்து வரும் உதவி தொகை வருமோ…. வராதோ…. என இல்லாமல் டான்.. டான்னு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வந்து விடுகிறது. இதை நம்பி எந்த ஒரு தேவையும் செய்ய முடிகிறது. இந்த நம்பிக்கையை முதல்வர் அளித்துள்ளார். இதை இரட்டிப்பாக்குவது மகிழ்ச்சி. முதல்வருக்கு நன்றி. அவர் ஆட்சி தொடர வேண்டும்.
திருச்சி தீரன்நகர் அமுதா(45): நான் பெட்டி கடை வைத்துள்ளேன். எனக்கு 5 பெண் குழந்தைகள். அனைவரும் படித்து வருகின்றனர். குறைவான வருவாயில் குடும்பம் நடத்தி வருகிறேன். இதில் மாதந்தோறும் மகளிர் தொகை வருவது பெரிய உதவியாக உள்ளது. இன்று ரூ.5000 கொடுத்தது மட்டற்ற மகிழ்ச்சி.
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் ஆயிஷா சித்திக்கா(34): கண்விழித்தவுடன் ரூ.5000 அக்கவுண்டில் வந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இது எதிர்பார்க்காத ஒன்று. ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த பணம் புத்தாடை எடுக்க உதவியாக இருக்கும். முன்பு இருந்த அரசு ஏனோ..தானோ என்றிருந்தது. ஆனால் இந்த ஆட்சி சிறப்பாக உள்ளது. மகளிரின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது. பெண்கள் சிறிய பணத் தேவைக்கு கூட கணவரை சார்ந்திருந்த நிலையில், ரூ.1000 பெண்களுக்கு பெரிய உதவியாகும். அடுத்த தேர்தலில் ஸ்டாலின் தான் எங்களுக்கு முதல்வராக வர வேண்டும்.
