×

இலவச திரைப்படங்கள், ஓடிடி வழங்குவதாக புதிய வகை மோசடி: செல்போன் தரவுகளை திருடும் போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்; பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் எச்சரிக்கை

சென்னை: இலவச திரைப்படங்கள், இலவச ஓ.டி.டி. சேவைகள் வழங்குவதாக செல்போனில் உள்ள தனிப்பட்ட தரவுகளை திருடும் போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று மாநில சைபர் க்ரைம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செல்போன்களில் அங்கீகாரமற்ற செயலிகளை மூன்றாம் தரப்பு இணையதளங்கள் பகிரப்படுகின்றனர். இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்தால் செல்போன் சாதனங்களில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்கள் செயலிழக்க செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்துபவர்கள் கடுமையான சைபர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.

இத்தகைய சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லாத செயலிகளை பயன்படுத்துவதன் மூலம், பயனாளர்களின் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகள், புகைப்படங்கள, செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்களை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது, போலி முதலீடு, போலி வேலைவாய்ப்பு போன்ற மோசடி குற்றச்செயல்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. மேலும், வங்கி மற்றும் நிதி தொடர்பான விவரங்கள் திருடப்பட்டால், பண இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்தல், பகிர்தல் அல்லது பயன்படுத்துதல் சட்ட விரோதமான செயலாகும். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பாதுகாப்பான அங்கீகாரிக்கப்பட்ட செயலிகள் மற்றும் தளங்களை மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
* மூன்றாம் தரப்பு இணையதளங்கள், டெலிகிராம், சமூக ஊடகங்களில் இருந்து திரைப்பட ஸ்ட்ரீமிங் ஆப்களை பதிவிறக்க செய்ய வேண்டாம்.
* தனியார் ஆப் என்ற பெர்மிஷன்- ஐ உங்கள் செல்போனின் செட்டிங்ஸ்களில் அனுமதிக்காதீர்கள். உங்கள் மொபைலில் ஏற்கனவே அமைந்துள்ள பாதுகாப்பு அம்சங்களை மாற்ற வேண்டாம்.
* இலவச திட்டங்கள், இலவச ஓடிடி, சந்தா இன்றி பிரீமியம் என்று உறுதியளிக்கும் செயலிகளை தவிர்க்க வேண்டும்.
* சந்தேகத்திற்கிடமான நம்பகமற்ற பாப் ஆப் விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள்.
* கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள அதிகாரப்பூர்வ ஓடிடி தளங்களை மட்டும் பயன்படுத்தவும்.
* தெரியாத லிங்க்களை கிளிக் செய்து அங்கீகாரமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்தல், பகிர்வு செய்தல், மற்றும் பயன்படுத்துதல் குற்றசெயலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu Cybercrime Wing… ,
× RELATED அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு...