×

மேட்டூர் மேற்கு கரை கால்வாய் பாசன பகுதியில் நெல் அறுவடை பணி மும்முரம்

*விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பவானி : மேட்டூர் அணையின் மேற்கு கரை கால்வாய் பாசன பகுதிகளான பவானி, அம்மாபேட்டை வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.மேட்டூர் மேற்கு கரை கால்வாய் 43.20 கி.மீ. நீளமும், கிளை வாய்க்கால்கள் 58.20 கி.மீ. நீளமும் கொண்டது. வினாடிக்கு 400 கனஅடி நீரை கொண்டு செல்லும் இந்த கால்வாய் மூலம் சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா மற்றும் ஈரோடு மாவட்டம், அந்தியூர், பவானி தாலுகா பகுதிகளில் 18,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, முன்னதாகவே ஜூலை 1ம் தேதி கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தாமதமாகவே ஈடுபட்டனர். பவானி வட்டாரத்தில் சுமார் 1,545 ஹெக்டர் பரப்பளவிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 2,280 ஹெக்டர் பரப்பளவிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து இருந்ததால் கால்வாய் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தடையின்றி திறக்கப்பட்டது. நெல் கதிர்கள் முற்றிய நிலையில் கடந்த ஜன. 15ம் தேதி கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நெல் வயல்களில் உள்ள ஈரம் காய்ந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக விவசாயிகள் அறுவடை பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் பாசன பகுதிகளில் முகாமிட்டு, அறுவடையில் ஈடுபட்டுள்ளன. நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. எடிடீ 38, சாவித்திரி 1009 (இட்லி குண்டு) ரகங்கள் ஏக்கருக்கு சராசரியாக 60 கிலோ மூட்டைகளில் 40 மூட்டைகள் கிடைத்துள்ளது. சன்ன ரக நெல்லும் கணிசமான விளைச்சலைக் கொடுத்துள்ளது.

விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு பவானியை அடுத்த மயிலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்களில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

Tags : Mettur West Bank Canal Irrigation Area ,Bhavani ,Ammapettai ,Mettur Dam ,West Bank Canal Irrigation Area ,Mettur… ,
× RELATED ஜோலார்பேட்டையில் இன்று மாலை 1.5 லட்சம்...