×

தர்ப்பூசணியில் செயற்கை நிறம்; சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம்: கலெக்டர் தகவல்

 

கரூர்: சமூக வலைத்தளங்களில் தர்பூசணியில் செயற்கை நிறம் கலக்கப்படுகிறது என்ற தவறான மற்றும் ஆதாரமறது என்று கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பனியின் தாக்கம் சற்று குறைந்து, பகல் பொழுதில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கக் குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகளில் மக்களின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோடைக் காலத்தில் விற்பனை செய்யப்படும் பழங்களில் ஒன்றான தர்பூசணிக்கு தனி மவுசு உண்டு. பொதுவாக தர்பூசணி நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாகக் கடைகள் மற்றும் சாலையோரங்களில் தர்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணும் இப்பழம், சமூக வலைத்தளங்களில் தர்ப்பூசணியில் செயற்கை நிறம் கலக்கப்படுகிறது என்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. நன்றாகப் பழுத்த தர்பூசணியில் சாறு அதிகமாக இருப்பதால், அதனை வெட்டும் கத்தியில் சிவப்பு சாறு படிவதாகக் காணப்படுகிறது. இது ரசாயன நிறம் அல்ல முழுமையான இயற்கை சாறே ஆகும். தர்ப்பூசணியின் இயற்கையான சிவப்பு நிறம் லைகோபீன் என்ற இயற்கை நிறமூலக்கூறுகளால் உருவாகிறது.

இது தர்பூசணி பழம் இயற்கையாகவும், முறையாகவும் பழுக்கும் போது தானாக உருவாகும் நிறம். தர்ப்பூசணி சாகுபடியில் விவசாயிகள் செயற்கை நிறங்களைக் கலப்பது நடைமுறையிலும் இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. மேலும், நம் உடலின் நீர்ச்சத்தின்மையைப் போக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணூட்ட சத்துக்களும் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகளவில் உள்ளதால் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு சுக்ரோஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுமின்றி உட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் உண்ணத்தூண்டும் ஒரு உன்னதப்பழமாகும். தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும் இயற்கையாவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதன் காரணமாகவே சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும், மஞ்சள் நிற தர்பூசணி பழத்திற்கு பீட்டா கரோட்டீன் எனப்படும் சுரபி காரணம் ஆகும்.

இதை கேரட், சக்கரைவள்ளி கிழங்கு, குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் காணலாம். இந்த லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நமது கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண்புரை நோயிலிருந்து பாதுகாக்கிறது.எனவே பொதுமக்கள் தர்பூசணி பழங்கள் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அச்சமின்றி தர்பூசணி பழங்களை உண்ணலாமென கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Tags : Karur ,
× RELATED அட்டப்பாடியில் அதிரடி வேட்டை: 1100...