×

மைத்துனரின் தொகுதிக்கு நிதி ஒதுக்கிய அன்புமணி திறப்பு விழாவில் மனைவி

கடலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் உள்ளார். இவர், பாமக அன்புமணியின் மனைவியான சவுமியாவின் உடன்பிறந்த தம்பி. அன்புமணி எம்பியாக இருக்கும்போது, தனது கட்சிக்காரரான கடலூர் கம்மியம்பேட்டையை உள்ளடக்கிய 24வது வார்டு கவுன்சிலர் சரவணன் (பாமக) வார்டுக்கு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்தை புதிதாக நியாய விலை கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கினாராம். புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கட்டிடம் திறப்பு விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்புமணியின் மனைவி சவுமியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வழக்கமாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் திட்டப்பணிகள் விழாவில் அன்புமணி கலந்து கொள்வது வழக்கம்.

சமீபத்தில் மரக்காணம், திண்டிவனம் பகுதிகளில் நடந்த திறப்பு விழாக்களில்கூட அன்புமணி பங்கேற்றாராம். ஆனால் கடலூரில் மைத்துனர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பங்கேற்காத நிகழ்வில் அவரது மனைவி சவுமியா பங்கேற்றார். பாமக, தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் தனது மைத்துனர் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அது தேர்தல் நேரத்தில் தேவையில்லாத அரசியல் ரீதியான விமர்சனத்தை ஏற்படுத்தலாம் என்பதாலே அவர் இந்நிகழ்வில் பங்கேற்பதை தவிர்த்து விட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் பேட்டி கொடுப்பதை தவிர்த்த சவுமியா, எதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags : Anbumani ,Congress ,Cuddalore ,Vishnu Prasad ,PMK ,Soumya ,Ward ,24 ,Councilor ,Saravanan ,Kammiyampettai ,
× RELATED காட்டுமன்னார்கோவிலில் நான்...