×

சீமான் குழப்புகிற குழப்பு இருக்கிறவர்களை கிறுக்கன் ஆக்கிவிடும்: அண்ணாமலையின் முட்டாள்தனத்தால் படுதோல்வியை பாஜ சந்தித்தது; மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா

1. தமிழக அரசியல் களம் 4 முனை போட்டியாக மாறியுள்ளது குறித்து?
தேர்தலில் நான்கு முனை போட்டி என்று சொன்னாலும், சீமான் இந்த தேர்தலில் ஒரு பொருட்டாக கருதப்படமாட்டார். ஏனென்றால் விஜயகாந்த் 3வது அணியை அமைத்து பார்த்தார். தேறவில்லை. அதிமுக உடன் கூட்டு சேர்ந்து தான் அவர் எதிர்கட்சியாக முடிந்ததே தவிர அவர் தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை. அந்த வாக்குகள் விஜயகாந்த் காலத்துக்கு பிறகு இப்போது விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது. விஜய் அரசியலில் நுழையாத கால கட்டத்தில் 8 சதவீத வாக்குகள் சீமானுக்கு வந்தது. அதுவே அவருக்கு அதிகம். அந்த இடத்துக்கு விஜய் வந்து விட்டதால் சீமான் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை இந்த முறை பெற மாட்டார். காங்கிரசை பொறுத்தவர, விஜய்யை பயன்படுத்தி தங்கள் தொகுதியை பெருக்கி கொள்ள முயல்வார்களே தவிர, திமுகவை விட்டு காங்கிரஸ் வராது. ஆட்சியில் பங்கு என்பது திமுக, அதிமுகவில் எந்த காலத்திலும் கிடையாது. எனவே, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை.

2. தமிழகத்தில் பாஜ காலூன்ற வேண்டும் என்பதில் ஒத்தை காலில் நிற்பது குறித்து?
அது உண்மை தான். ஆட்சி இல்லாத காலத்தில் அவர்கள் தமிழகத்தில் கருதப்படுகிற கட்சியாகவே இல்லை. 10 ஆண்டாக ஆளும் கட்சியாக இருப்பதால் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதிகாரம் இல்லாவிட்டால் அவர்களை கூட்டு சேர்க்கக் கூட தமிழ்நாட்டில் எந்த கட்சியும் தயாராக இல்லை என்ற நிலை இருந்தது. ஆட்சிக்கு வந்ததால் கருதப்படுகிற நிலைக்கு வந்திருக்கிறார்கள். வாக்கு வங்கியால் உயர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அண்ணாமலை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செய்த முட்டாள்தனத்தால் தான் பாஜ படுதோல்வியை சந்தித்தது. அதனால் தான் இந்த தேர்தலில் அண்ணாமலையை டெல்லி தலைமை ஒதுக்கி வைத்துள்ளது.

3. தேர்தல் வியூக நிபுணர்களை கொண்டு விஜய் அரசியல் செய்வது குறித்து?
கடந்த தேர்தலில் அண்ணாமலை எந்த மாதிரி அரசியல் செய்தாரோ அந்த அரசியலைத் தான் இப்போது விஜய் செய்கிறார். மோதல் நேரடியாக நடக்கும் போது தான் மக்களின் மனநிலை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். 10% வாக்கு வாங்கினால் கூட, கிணற்றுக்குள் தான் விழ வேண்டும். விஜய் தானும் கெட்டு எதிர்தரப்பை கெடுக்கும் தன்மையாகத் தான் இருக்கும். அவர் இந்த முயற்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து ஏஜெண்டுகளை வைத்துக் கொள்கிறார். தன்னோடு கூட்டு சேர யாரும் வரமாட்டார்கள் என்பது விஜய்க்கும் புரிகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு தருவதாக சொல்லுங்கள் அனைவரும் ஓடி வந்து விடுவார்கள் என்று அந்த ஏஜெண்டுகள் யோசனை சொல்கிறார்கள். இன்றுவரை ஒருவர் கூட வரவில்லை. இவர் கரை ஏறுவாரா என்பது உறுதி இல்லாத போது இந்த படகில் நாமும் ஏறி என்ன செய்வது என்பது தான் காரணம்.

4. இந்த தேர்தலை பொறுத்தவரை சீமான் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடத்துகிறவர். விவசாயிகளை அரசாங்க சிப்பந்திகளாக்குவேன் என்று சொல்கிறவர். 10 ஆண்டுகளாக அவரது பேச்சால் பலருக்கு மூளை கலங்கிவிட்டது. இந்த தேர்தலோடு சீமானை பின்பற்றுகிறவர்கள் கூட்டம் அற்றுப்போய்விடும். ஆய்… பூய் என்று பேசுகிறார் என்பதற்காக அவரை அரசியல்வாதி என்று கூறிவிட முடியாது. அவரது அரசியல் ஒரு புரியாத அரசியலாகவும், ஆவேசமாக பேசினால் எல்லாம் சரியாகிபோய்விடும் என்றும் நினைக்கிறார். பொருளாதாரத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் அவர் நடத்துகிற அரசியல் இருக்கிறதே யப்பா முடியலப்பா.. இந்த ஆள் குழப்புகிற குழப்பு இருக்கின்றவர்களை கிறுக்கன் ஆக்கிவிடுவார். எனவே அந்த அரசியல் தொலைவது நல்லது தான்.

* பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன்… பிரேமலதா முன்னிலையில் தேமுதிக நிர்வாகி மிரட்டல்
சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பாக முகவர்கள் மற்றும் பூத் முகவர்களின் ஆலோசனை கூட்டம் அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் பொருளாளர் சுதீஷ், தலைமை கழக செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், மேடையில் ஒவ்வொரு நிர்வாகியும் பேசினர். அப்போது, விருகம்பாக்கம் தேர்தல் பொறுப்பாளர் தா.மாரி பேசும்போது, ‘எனக்கு கோபம் கோபமாக வருகிறது. நான் கட்சிக்காக 3 முறை சிறை சென்றுள்ளேன். அதில் பத்திரிகையாளர்களை அடித்து விட்டு சிறை சென்றிருக்கிறேன். நான் மறுபடியும் சொல்கிறேன். எனக்கு கோபம் வருகிறது. வீடு புகுந்து உங்களை அடிக்க வேண்டியது வரும். கண்டிப்பாக அது நடக்கும்’ என்று பேசினார். இந்த பேச்சை கண்டிக்காமல் பிரேமலதா ரசித்து பார்த்து கொண்டிருந்தார்.

Tags : Seeman ,BJP ,Annamalai ,Pazha.Karuppaiya. ,Tamil Nadu ,Vijayakanth ,AIADMK… ,
× RELATED சொல்லிட்டாங்க…