×

₹2 கோடி சீட்டு பணம் மோசடி செய்தவர் கைது ஆரணியில் பரபரப்பு காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

ஆரணி, பிப்.3: ஆரணியில் மாதச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை நாடகசாலை பேட்டையை சேர்ந்தவர் அன்புவேல்(45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மாதச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் ஆரணி டவுன், சைதாப்பேட்டை, முள்ளிப்பட்டு, களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், ₹5 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரை மாதச்சீட்டு கட்டி வந்தனர். ஆனால், அன்புவேல் சீட்டு கட்டி வந்த நபர்களுக்கு பல ஆண்டுகளாக பணத்தை திருப்பி தராமல், பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்து வந்துள்ளார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த சீட்டு கட்டிய நபர்கள் எஸ்பி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். அதன்படி, நேற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது போலீசார், அன்புவேல் மீது நடவடிக்கை எடுக்க தனித்தனியாக புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
அதற்கு அவர்கள், அன்புவேலுவை கைது செய்யாமல் பணத்தை மட்டும் வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு போலீசார், முறையாக புகார் அளித்தால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வரும் அன்புவேலுவின் வீட்டிற்கு நேற்று, சீட்டு கட்டி வந்த நபர்கள் சென்றுள்ளனர். பின்னர், அவரது வீட்டின் பூட்டை உடைத்து கார், வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த அன்புவேல் உடனடியாக ஆரணி டவுன் போலீசில் புகார் அளிக்க வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், அன்புவேல் வந்திருப்பதை அறிந்த சீட்டு கட்டி ஏமாந்த நபர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், அன்புவேலிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். போலீஸ் விசாரணையில், அன்புவேல் ₹2 கோடி வரை சீட்டு பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களின் புகாரின் பேரில் அன்புவேலுவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : siege ,riot police station ,Arani ,
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...