×

தொழிற்சாலை, மருத்துவமனை, குடியிருப்புகளின் காவலாளிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி

அம்பத்தூர், பிப்.10: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அறிவுரையின்படி, சென்னை புறநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் காவலாளிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சென்னை புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி நடத்தப்படுகிறது.
இதில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்த காவலாளிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் பணிபுரியும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தீ பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் எவ்வாறு பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து அடிப்படை பயிற்சி இலவசமாக நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்டு பயிற்சி முடித்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை புறநகர் மாவட்ட அலுவலர் லோகநாதன் கூறுகையில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் மாவட்ட அலுவலகத்தில் காவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் நடைபெறும் பெரும் தீ விபத்துகள் ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட்டால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்படும். அதனை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் காவல் பணியில் உள்ளவர்களுக்கு, எந்த தீயை எப்படி அணைக்க வேண்டும் என்ற பயிற்சி செய்முறையாக கொடுத்தால் வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்துகள் ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படும் என்பதால் அவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது,’ என்றார்.

Tags : Ambattur ,Tamil Nadu Fire and Rescue Services Department ,Tamil Nadu Fire and Rescue Services Department… ,
× RELATED சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு