- துறைமுகத் தொகுதி
- சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை கார்ப்பரேஷன்
- ராயபுரம் மண்டலம், வார்ட்-57, வால்டாக்ஸ் ரோட், வி. ஓசி...
சென்னை, பிப்.5: துறைமுகம் தொகுதியில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கூடத்தை, வரும் 8ம்தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-57, வால்டாக்ஸ் ரோடு, வ.உ.சி. சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.13.43 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதி மற்றும் வாகன நிறுத்த வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணியினைப் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ‘தமிழக முதல்வர், பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், அதேபோல் வணிக சந்தைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சீரான மின்சாரம் என பல்வேறு வகையான திட்டங்களை தீட்டி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்’. அதில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முழுமையாக பொதுமக்களின் சேவைக்காக கட்டணமில்லா டயாலிசிஸ் மையத்தை முதலவர் தொடங்கி வைத்தார்.
அதேபோல், பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஏரியை ஒட்டி விரிவான அளவில் ஒரு பூங்காவையும் திறந்து வைத்தார். தற்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடம், சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டடமாகும். இது சுமார் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த அரங்கில் 600 நபர்கள் அமர்ந்து திருமண விழாக்களைப் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 250 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும், 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை முதல்வர் இந்த திருமண மாளிகையை வரும் 8ம்தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வார்டு-54, அம்மன் கோயில் தெருவில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், ஏழுகிணறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காய் கனி அங்காடியில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் மக்களுடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார். இதில், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் நவீன், வெ.பரிமளம், ராஜேஸ்வரி தர், சுதா தீனதயாளன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
