×

தரமணி, திருவான்மியூரில் வீடுகளின் பூட்டை உடைத்து 54 சவரன், ரூ.7.5 லட்சம் திருடிய ரேபிடோ டிரைவர் சிக்கினார்

வேளச்சேரி, பிப்.10: தரமணி மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து நகை திருட்டில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 54 சவரன் நகை, ரூ.7.5 லட்சம், செல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தரமணி, கானகம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரதா (45). இவர், கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 12 செயின்கள், 3 ஆரம் மற்றும் 3 ஜோடி கம்மல்கள் திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் நகையை திருடிக் கொண்டு பைக்கில் தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பைக் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரை சேர்ந்த ஆனந்த் (50) என்பவருடைய பைக் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் ஆனந்தை கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். அதில், இவர் பழைய குற்றவாளி என்பதும், தரமணி மற்றும் திருவான்மியூர் பகுதிகளில், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 54 சவரன் நகைகள், ரூ.7.5லட்சம், திருட்டு தொழிலுக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர், பெயின்டிங் வேலை மற்றும் ரேபிடோவில் பைக் ஓட்டிக் கொண்டே திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : TARAMANI ,THIRUVANMEUR ,VELACHERI ,BIKE ,
× RELATED தொழிற்சாலை, மருத்துவமனை,...