×

வாணாபுரத்தில் பள்ளி கொடி கம்பத்தில் பழைய துணியால் கொடியேற்றம்

ரிஷிவந்தியம், பிப். 10: பள்ளி கொடி கம்பத்தில் பழைய துணியால் கொடியேற்றிய மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வாணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல் பள்ளியின் கேட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று வழக்கம் போல் காலையில் பள்ளியின் கேட்டை திறந்து பார்த்தபோது தேசிய கொடியேற்றும் கம்பத்தில் பழைய துணியால் கொடியேற்றப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் காலியான மதுபாட்டில்கள் கிடந்துள்ளது.

இதனை பார்த்த மாணவ, மாணவிகள் பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் பழைய துணியால் கொடி ஏற்றி, மதுபாட்டில்களை பள்ளியில் வீசிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்த பகண்டை கூட்டுச்சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவ-மாணவிகளிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து பகண்டை கூட்டு சாலை போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags : Vanapuram ,Rishivanthiyam ,Kallakurichi district ,Rishivanthiyam Vanapuram Panchayat Union Primary School ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...