×

பாமக மற்றும் மாம்பழ சின்னம் வழக்கு முடித்து வைப்பு ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு போலி ஆவணம் கொடுத்து பா.ம.க கட்சியை அபகரித்ததாக அன்புமணி ராமதாசுக்கு எதிராக பா.ம.க ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதையடுத்து முன்னதாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், ”அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது. ஒரு சாராரின் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்க கூடாது. பாமக கட்சியில் இதே நிலை நீடித்தால் சின்னத்தை முடக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். இருப்பினும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி உங்களது கோரிக்கையை வைக்கலாம் என்று உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை கடந்த டிசம்பர் மாதம் முடித்து வைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரியும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவானது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் 18வது பத்தியில் உள்கட்சி பிரச்சனை தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் அது வராது என கூறப்பட்டது.

குறிப்பாக பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை, உட்கட்சி பிரச்சனை வரும்போது எந்த தரப்பை அங்கீகரிக்க வேண்டும் அல்லது எந்த தரப்பை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் நேரடியாக முடிவெடுக்க முடியாது என நீதிமன்றம் கூறியிருந்தது. அதனை எப்படி ஏற்க முடியும். இதில் தேர்தல் ஆணையத்தைப் பொறுத்த வரையில் தங்களுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் அதாவது 29ஏ சட்ட விதிப்படி பா.ம.க கட்சி விவகாரத்தில் அன்புமணி தரப்பு கொடுத்த ஆவணத்தின் அடிப்படையில் அவரை அங்கீகரித்து ஒரு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

ஆனால் இதற்கு ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்,” இந்த விவகாரத்தில் அன்புமணி தரப்பில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். எங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதி,” இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும் கருத்துக்களை கூறவும் விரும்பவில்லை. மாறாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் அகியோர் தரப்புகளின் வாதங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டேன். இருப்பினும் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பாமக கட்சி மற்றும் மாம்பழ சின்னம் ஆகிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதற்கு நாங்கள் எந்தவித தடையும் விதிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தார்.

* ‘தற்போதைய நிலவரத்தின்படி ராமதாஸ் தலைவர்’
ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் அளித்த பேட்டியில், அன்புமணி போலியான ஆவணங்கள் கொடுத்து தேர்தல் ஆணையத்தில் குளறுபடி செய்திருக்கிறார். ஆனால் தேர்தல் ஆணையம் ஏதோ ஒரு காரணத்திற்காக அன்புமணிக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. மேலும் முந்தைய உத்தரவில் நீதிமன்றம் எதனையும் மாற்றவில்லை என்பதால் தற்போதைய நிலவரத்தின்படி பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் இருக்கிறார் என்றார்.

* தீர்ப்பை மாற்றாத நீதிபதி
நீதிபதி மினி புஷ்கர்னாவை பொருத்தவரையில் பாமக கட்சி மற்றும் மாம்பழ சின்னம் விவகாரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை. அதாவது அப்போது,” அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது. குறிப்பாக கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. மேலும் அங்கீரக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரரின் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்கக் கூடாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது என்று தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.

* அன்புமணி தான் தலைவர்
அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு டெல்லியில் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டின்படி தற்போது பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை இன்று(நேற்று) தேர்தல் ஆணையத்தின் வாதத்தையும் அதேப்போன்று எதிர் தரப்பான டாக்டர் ராமதாஸ் வழக்கறிஞர் வாதத்தையும் பதிவு செய்து கொண்டது. தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணி உள்ளார் என்று தேர்தல் ஆணையம் கூறியதை பதிவு செய்யக்கூடாது என்று ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் அதனை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : PMK ,Mango ,Delhi High Court ,Election Commission ,New Delhi ,PMK Ramadoss ,Anbumani Ramadoss ,Election Commission… ,
× RELATED இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி...