×

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் ஏடிஜிபி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

சென்னை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஏடிஜிபி டி.ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் டி.ராதாகிருண்ஷன். இவர் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, வங்கியில் மேலாளராக பணியாற்றினார். 1981ல் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியானார்.

பின்னர் தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றினார். சென்னையில் இணை கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனராக பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்ற அவர், தனது குடும்பத்தினருடன் சென்னை பனையூரில் வசித்து வந்தார். இதற்கிடையே முதுமை காரணமாக நோயால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, டி.ராதாகிருஷ்ணனின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் தற்போது உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.

டி.ராதாகிருஷ்ணன் இறப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘முன்னாள் ஏடிஜிபி டி.ராதாகிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். நான் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் சென்னை மாநகர இணை ஆணையராக ராதாகிருஷ்ணன் பணியாற்றினார்.

1981 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அவர், ஏஎஸ்பி, முதல் ஏடிஜிபி வரை காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளில் சட்டம் ஒழுங்கை திறம்படக் கையாண்டிருக்கிறார். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Former ,ADGP ,Chief Minister ,MK Stalin ,Chennai ,T. Radhakrishnan ,Tamil Nadu Police ,Kovilpatti ,Thoothukudi district ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...