சென்னை: சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1,188 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று(08-02-2026) நடைபெற இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. பின்னர் வேறு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 நாட்கள் முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் விவரம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ரத்தான குரூப் 2, 2 ஏ தேர்வு மார்ச் 15ம் தேதி காலையில் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (தொகுதி-II (ம) IIA பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான -தாள்-I- தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது.
மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் கீழ்க்கண்டவாறு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28.02.2026-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
எதிர்வரும் 22.02.2026 மு.ப. அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11.02.2026 அன்று வெளியிடப்படும். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
