புதுடெல்லி: ‘ஒன்றிய பாஜக அரசின் செய்தித் தொடர்பாளர்’ போல செயல்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் பட்ஜெட் விவாதத்தை நிறைவேற்ற ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் 2026-27ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள், புதிய சரக்கு வழித்தடங்கள் மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 20 தேசிய நீர்வழிப் பாதைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. மேலும், பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஊக வணிகத்தை குறைக்கும் நோக்கில் எதிர்கால வர்த்தகம் மற்றும் விருப்ப வர்த்தகம் மீதான வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் பாஜக கூட்டணி வரவேற்றுள்ள நிலையில், விளிம்புநிலை மற்றும் ஏழை மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக கடந்த 3ம் தேதி முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட அமளியால், கடந்த 5ம் தேதி நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதங்களின் போது அவையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் அவைக்கு வராதது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பிரதமரின் இருக்கை அருகே சென்று திட்டமிடப்படாத போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்ற ரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவரை வர வேண்டாம் என அறிவுறுத்தினேன்’ என்று தெரிவித்தார். இதனை முற்றிலும் அடிப்படையற்றது மற்றும் ‘விசித்திரமானது’ என நிராகரித்த எதிர்க்கட்சிகள், சபாநாயகர் ‘ஒன்றிய அரசின் செய்தித் தொடர்பாளர்’ போல செயல்படுவதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தற்போது திட்டமிட்டுள்ளன. சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறைப்படி கொண்டு வர குறைந்தது 50 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்ற மாண்புகள் சிதைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக முழக்கமிட்டு வருகின்றன. முன்னதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெறவில்லை; காங்கிரஸ் கட்சித் தலைவர் அவையை நடத்த விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கையால் சபாநாயகர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதால் சபையின் கண்ணியம் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நூறு சதவீத உறுப்பினர்களும் உரையாற்றுவதற்கான பட்டியல் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் மட்டுமே அவை முடக்கப்பட்டுள்ளது; அவர் விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும், ஆனால் அவரது தாத்தா பாட்டி காலத்திலேயே உருவாக்கப்பட்ட விதிகளை அவரே மீறி வருகிறார். தொடர்ந்து அமளி நீடித்தால் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்படாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் சூழல் ஏற்படும். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களே பேச வாய்ப்பு கிடைக்காமல் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு முழுப் பொறுப்பையும் காங்கிரஸ் கட்சியே ஏற்க வேண்டும்’ என தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும் முன்பாக, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இது தொடர்பாக திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளதுடன், ‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில விவசாய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவது, இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று தனது கவலையைத் தெரிவித்துள்ளார். மக்களவை முற்பகல் 11 மணிக்கு கூடியதும் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணிக்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு காரணமாக நாடாளுமன்றத்தில் தற்போது உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

