×

காரிமங்கலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாடு அதிகரிப்பு

காரிமங்கலம், பிப்.3: காரிமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ராமசாமி கோயில் மொரப்பூர் சாலை, தர்மபுரி மெயின் ரோடு கடைவீதி, பாலக்கோடு ரோடு பஸ் ஸ்டாண்ட், அகரம் ரோடு ஆகிய பகுதியில் மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் அதிக அளவில் உள்ளது. காரிமங்கலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கேரிபேக் உட்பட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் தடைவிதித்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.காலப்போக்கில் பேரூராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எவ்வித சோதனையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு காரிமங்கலம் பேரூராட்சியில் அதிக அளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, காரிமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவி மாயம்
பாலக்கோடு பொம்மலூர் பகுதியை சேர்ந்த மாதுராஜ் மகள் லாவண்யா(17). இவர், ஜெக்கசமுத்திரம் அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்ஒயர் திருட்டு
தர்மபுரி மாவட்டம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாலக்கோடு - மாரண்டஅள்ளி ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மின்சார ரயிலுக்காக வைக்கப்பட்டிருந்த, 200 மீட்டர் மின்ஒயரை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கன்வாடி கட்டும் பணி
அரூர் அருகே பொய்யப்பட்டியில் அங்கன்வாடி மையம் ₹13லட்சம் மதிப்பில் கட்டும் பணி மற்றும் அங்குள்ள உயர்நிலை பள்ளி வளாகத்தில், ₹13லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. மேலும் ₹1.80 லட்சம் மதிப்பில் நவீன கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

₹12லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
காரிமங்கலம் வாரச்சந்தையில் கால்நடைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் முடிந்த பின்னர் சில வாரங்களாக, கால்நடை விற்பனை மந்தமாக இருந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில், 550 மாடுகள் ₹47லட்சத்திற்கும், 600ஆடுகள் ₹7லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ₹2லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் வரத்து 1 லட்சமாக இருந்தது. காயின் அளவை பொறுத்து ₹8 முதல் ₹18வரை விற்பனை செய்யப்பட்டது. இதில், மொத்தம் ₹12லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : municipality ,Karimangalam ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த...